புகழ்பெற்ற யானைமலையில் சிற்பக் கலை நகரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு - போராட்டம் வலுக்கிறது

மதுரைஅடுத்து உள்ள ஒத்தக்கடை யானைமலையை குடைந்து சிற்பக்கலைநகரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொது மக்கள் மேலூர் ரோட்டில் சாலை மறியல் ஈடுபட்டதால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.


மதுரை அருகே உள்ள யானைமலையை குடைந்து சிற்பக்கலை நகரம் அமைக்க தொல்லியல் துறை முயன்று வருகின்றது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந் நிலையில், யானைமலையை குடைய கூடாது என்று கூறி யானை மலையை சுற்றிய ஒத்தக்கடை, அரும்பனூர், நரசிங்கம் உட்பட 20 கிராமங்களை சேர்ந்த 1000 பேர் மறியலில், கல்வீச்சு, கடையடைப்பு, மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர்.




இதில், கல்வீச்சை தடுக்க முயன்ற போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டம் காணப்பட்டது.



தகவல் அறிந்த, எஸ்.பி.,மனோகரன், ஆர்.டி.ஓ., சுகுமாரன், வடக்கு தாசில்தார் உதயகுமார் ஆகியோர் பொது மக்களிடம் சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் .



இப்பிரச்னை குறித்து பிப்ரவரி 13 ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.



யானை மலையின் வரலாறு...



மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை, யானை மலை மிகவும் பழமையான, பிரபலமான, புராதனமான ஒரு வரலாற்றுச் சின்னமாகும். ஒரு யானை படுத்துக் கிடந்தால் எப்படித் தோன்றுமோ, அதே போல இந்த மலை இருப்பதால் யானை மலை என்று பெயர் வந்தது.



அங்கு நரசிங்கம் பெருமாள் கோவில் என்ற குடவரைக் கோவில் உள்ளது. தென் தமிழகத்தின் மிக முக்கிய நரசிங்கப் பெருமாள் கோவில்களில் இது ஒன்றாகும்.



அழகர் கோவிலுக்கும், திருமோகூருக்கும் இடையே இந்தக் கோவில் யானை மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு குகைக் கோவிலாகும்.



பாண்டிய மன்னன் குமரன் சடையனின் அமைச்சர்களில் ஒருவரான மாறன் காரி என்பவர் இந்தக் கோவிலைக் கட்டினார்.



கி.பி. 770ம் ஆண்டு இந்தக் கோவிலை மாறன் காரி கட்டத் தொடங்கினார். ஆனால் முழுமை அடைவதற்குள் மரணமடைந்து விட்டார். இதையடுத்து அவருடைய சகோதரர் மாறன் எயினன் என்பவர் கோவிலை முழுமையாகக் கட்டி முடித்து, முகமண்டபத்தையும் அமைத்து கும்பாபிஷேகத்தையும் நடத்தியதாக கோவில் தல வரலாறு கூறுகிறது.



இங்குள்ள சக்ர தீர்த்தத்தில் சிவபெருமான் வந்து நீராடியதாக புராணங்கள் கூறுகின்றன. பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்தியதால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாம். இதையடுத்து அதிலிருந்து விடுபடுவதற்காக இங்கு வந்து நீராடினார் என்பது ஐதீகம்.



இதையடுத்து சக்ர தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வணங்கினால், அனைத்துப் பாவங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



இந்த யானை மலை தோன்றியதற்கே ஒரு வரலாறு உள்ளது. அதுகுறித்து திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ளதாவது..



பாண்டியர்களுக்கு எதிரான போரில் வெல்ல முடியாமல் சோழ மன்னன் தவித்து வந்தான். இதையடுத்து இங்கு வந்து இங்குள்ள ஜைனர்களின் உதவியை நாடினான். இதையடுத்து தங்களது மந்திர பலத்தால் ஒரு மாபெரும் யானையை உருவாக்கி அதற்கு அனைத்து சக்திகளையும் கொடுத்து பாண்டிய மன்னனை நோக்கி அதை ஏவினராம் ஜைனர்கள்.



இதையடுத்து சிவபெருமானை வணங்கி உதவி நாடினான் பாண்டியன் மன்னன். சிவபெருமானும் உடனடியாக தலையிட்டு நரசிங்க அஸ்திரத்தை ஏவி அந்த பிரமாண்ட யானையை மலையாக மாறச் செய்தாராம்.



இப்படியாக மதுரையும், பாண்டிய மன்னனும் காப்பாற்றப்பட்னராம். இதையடுத்து பாண்டிய மன்னன், வைகை ஆற்றின் வடக்கே ஒரு கல் யானையைச் சிலையை நிறுவினான் என்று வரலாறு கூறுகிறது. அந்த யானை சிலை உள்ள இடம் யானைக் கல் என்று இன்றளவும் மதுரையில் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



இங்கு சமணர் குகைகளும் அங்கு உள்ளனர். வாழும் வரலாற்றுச் சின்னமாக அது திகழ்கிறது.



இந்த மலையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள கீழவளவு பகுதியில் இருந்த பெரிய மலைகளை குவாரி கும்பல் உடைத்து தரைமட்டமாக்கிவிட்டது. இங்கு கிடைக்கும் கிரானைட் கற்கள் பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன
thanks tohttp://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/public-agitation-against-yanaimalai.html
புகழ்பெற்ற யானைமலையில் சிற்பக் கலை நகரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு - போராட்டம் வலுக்கிறதுSocialTwist Tell-a-Friend

1 comment:

பானு said...

Its really a shock to know about this.Thanks for the post Maya.