தி. நந்தகுமார்First Published : 10 Dec 2010 12:18:00 AM IST
கோவையில் முஸ்கின், ரித்திக் எனும் இரு மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்டதும், சென்னையில் கடத்தப்பட்ட மாணவர் கீர்த்திவாசனை போலீஸாரே பணம் கொடுத்து மீட்ட சம்பவமும் அண்மையில் அடுத்தடுத்து நடந்தன. இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பள்ளிகளுக்கு மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான சுற்றறிக்கைகளை தமிழக அரசு அனுப்பியுள்ளது. கல்வி நிலையங்களையும் கண்காணித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போலீஸாரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
உண்மையில், மாணவிகள் கடத்தல் தொடர்கதையாகவே உள்ளது. இது, நாள்தோறும் எங்காவது ஓரிடத்தில் அன்றாடம் நடைபெற்றுவரும் சம்பவமாகவே ஆகிவிட்டது. மாணவிகளை இளைஞர்கள் அல்லது உடன் படிக்கும் மாணவர்களே ஆசை வார்த்தை கூறி காதலில் வீழ்த்தி, திருமணம் செய்துகொள்வதே இப்போதைய "வீர விளையாட்டு'.
மாணவிகள் கடத்தப்பட்டால் பெற்றோர்கள் பலர் தங்களது குடும்ப கௌரவத்தை மனதில் கொண்டு போலீஸில் புகார் தெரிவிப்பதில்லை. வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், இத்தகைய செய்திகளைப் பத்திரிகைகளும் ஊக்குவிப்பதில்லை. இவர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ளோருக்கு சில நாள்கள் பொழுதுபோக்காகப் பேசப்படும் விஷயமாகவே இருக்கும்.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் இவ்வகை கடத்தல்களில் சிக்கி, தங்களது எதிர்கால வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி வருகின்றனர். பெற்றோருக்குப் பயந்து காதலனோடு ஊரைவிட்டு வெளியூர் செல்வதால், இவர்களின் கல்வியும் தடைபடுகிறது.
"ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்' என்பதற்கேற்ப இவர்களில் பலர் கொஞ்சநாளில் கணவனைவிட்டுப் பிரியும் நிலையும் ஏற்படுகிறது. அப்போது இவர்களைப் பெற்றோர்கள் அரவணைப்பதில்லை. தடைபட்ட கல்வியால் சரியான வேலைவாய்ப்புக் கிடைக்காமலும், அன்றாட வாழ்க்கையை பல்வேறு போராட்டங்களுக்கு இடையே நடத்தியும் வருகின்றனர்.
இதுமட்டுமன்றி, மாணவிகளோடு நெருக்கமாகப் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அவர்களது பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் விஷமிகளும் உண்டு.
இன்டர்நெட், திரைப்படங்கள், சின்னத்திரை மெகா சீரியல்கள், குடும்பப் பிரச்னைகள், பெற்றோர் அரவணைப்பு இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் இளம்வயதுக் காதல் அதிகரித்து வருகிறது.
கல்வி நிலையங்களில் வாரந்தோறும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்த "நீதிபோதனை' வகுப்புகளும் அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுவிட்டன. இயந்திரமயமான உலகில் தம்பதி, பணிக்குச் சென்றுவிடுவதால், தங்களது பிள்ளைகள் மீது அரவணைப்போ அல்லது கண்டிப்போ காட்டுவதில்லை. இதனால், அவர்கள் மீது மாற்றுப் பாலினத்தவர் செலுத்தும் அன்பு காதலாக மாறுகிறது. அது அன்பா(!) அல்லது விஷமா(?) என்பது அவர்களுக்கே புரிவதில்லை. அப்பாவி மாணவிகளின் வாழ்க்கையும், கனவுகளும் சிதைக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் செல்போன்கள் எடுத்து வருவதை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும். கல்வி நிலையங்களுக்கு அருகே செயல்படும் பிரத்தியேக தொலைபேசி நிலையங்களும், செல்போன் ரீசார்ஜ் கடைகளும் உண்டு. இவற்றை கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளே கண்காணித்து, தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில், மாணவர்களின் பெற்றோரும் தங்களது ஓய்வுநேரத்தில் தங்களது பிள்ளைகள் மீது அரவணைப்போடு இருத்தல் வேண்டும். பிள்ளைகளுக்குத் தெரியாத விதத்தில் அவர்களைக் கண்காணித்து, கண்டிப்பும் செலுத்த வேண்டும்.
பஸ் நிலையங்கள், திரையரங்குகள் ஆள்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் ஜோடியாகப் பேசுவதை மக்கள் தடுக்க வேண்டும். யாரோ.. எவரோ நமக்கு ஏன் வம்பு என்று இருந்துவிடாமல், அவர்களை விசாரித்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கோ அல்லது அவர்களது பெற்றோருக்கோ தகவல் தெரிவிக்கலாம்.
இதோடு, முக்கிய இடங்களில் சந்தேகப்படும்படியாகத் திரியும் ஜோடிகளை போலீஸாரே விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம். மகளிர் காவல் நிலையங்களிலும் கூடுதல் போலீஸாரை நியமித்து, இப்பணியில் ஈடுபடுத்தலாம். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு மாணவர்களுக்கு கவுன்சலிங் அளிக்கலாம்.
எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக மாறாமல் இருப்பதற்காக, மாணவிகள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையே இப்போது உடனடித் தேவை! ஏனென்றால் "பெண்கள்தான் நாட்டின், வீட்டின் கண்கள்'.
thanks to http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=344140&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment