ஜெயலலிதா அம்மையாருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாழ்த்து

மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாருக்கு வாழ்த்துக்கள்

தமிழீழத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் இடையிலான உறவானது தொப்புள்கொடி உறவு போன்றது. அத்தகைய முக்கியத்தும் வாய்ந்த தமிழ் நாட்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தங்களது தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதனுடன் இணைந்த கட்சிகளும் பெரு வெற்றியீட்டியுள்ளமையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராட்டி வாழ்த்துகின்றது.

கடந்த 13-05-2011 அன்று தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தாங்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தமிழீழ மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலை தொடர்பாகவும், அவர்களது அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் தாங்கள் கூறியுள்ள கருத்துக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உன்னிப்பாக அவதானித்துள்ளதுடன், அக்கருத்துக்களை யாம் வரவேற்கின்றோம்.

மேலும், கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழீழ மக்கள் மீதான இன அழிப்பு உச்சம் பெற்றிருந்த காலகட்டத்தில், அதனை மூடி மறைப்பதற்கு பல நாடுகளும், பல அரசியல் சக்திகளும் முயற்சி செய்து கொண்டிருந்தன. அவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்கள் நாதியற்றவர்களாக நின்றிருந்த நிலையில் தமிழகத்தில் இருந்து தமிழீழத் தமிழ் மக்களுக்கான ஆதரவுக் குரலாகவும், நீதியின் குரலாகவும் உங்கள் குரல் வெளிவந்திருந்தது.

"இலங்கையில் தொடர்ந்தும் குண்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண ஒரே வழி தனி ஈழம் அமைப்பதுதான். நாம் சொல்வதைக் கேட்கும் மத்திய அரசு அமைந்தால் எப்படி இந்திரா காந்தி பாகிஸ்தானிடமிருந்து வங்காள தேசத்திற்கு விடுதலை பெற்றுத்தந்தாரோ அதைப் போலவே இலங்கையில் தனி ஈழம் அமைக்கத் தேவையான நடவடிக்கை எடுப்பேன்'' - (மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் ஏப்ரல்-மே 2009 இல் ஆரணி கோட்டை மைதானத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து)

"இலங்கையில் இல்லாமல் ஜெயலலிதா எங்கு வேண்டுமானாலும் தனி ஈழம் அமைக்கட்டும்' என்று இலங்கை அரச உயரதிகாரி ஒருவர் கூறியது தொடர்பாக நீங்கள் பதிலளிக்கையில் "ஈழத் தமிழர்கள் அவர்கள் மண்ணிலேயே ஈழம் காண்பார்கள். அவர்களது அன்னை பூமி அது. அவர்களது உரிமை பூமி அது. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி ஈழம் அமைப்பேன்'' அங்கே இப்பொழுது அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் தமிழர்களுக்காக எல்லா உதவிகளையும் செய்வது நாங்கள் அமைக்க இருக்கும் மத்திய அரசின் தலையாய கடமையாக இருக்கும் என்று உறுதி கூறுகின்றேன்.'' (மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் ஏப்பிரல் - மே 2009 இல் திருப்பூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் இருந்து)

"இலங்கை இராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் போக, எஞ்சி உயிரோடிருக்கின்ற இலங்கைத் தமிழர்களை சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கும் எண்ணமே இலங்கை அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது! எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களை அரசு நடத்தும் முகாம்களில் கைதிகளைப் போல், அடிமைகளைப் போல் அடைத்து வைத்து எல்லா உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலையில் நாளடைவில் அவர்களையும் அழித்து விடுவதே இலங்கை அரசின் பயங்கரமான திட்டமாகத் தெரிகிறது. உண்மை நிலை இப்படி இருக்க இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட ஐனநாயக ரீதியிலான தீர்வு காண்பது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது என்று பேசுவதெல்லாம் வீண்வேலை. அது வெறும் கண்துடைப்பு என்று தெரிகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களவர்களுடன் சம உரிமை வழங்கும் எண்ணமே இலங்கை அரசுக்குக் கிடையாது. ஒரேயடியாக இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்துவிட வேண்டும் என்பதுதான் இலங்கை அரசின் ஒரே செயற்திட்டமாக உள்ளது. இலங்கைத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஐ வாழ்வு வாழவேண்டும். சிங்கள மக்களுக்குள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும். இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பதுதான். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொற்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால் தனி ஈழம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன். இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண தனி ஈழம்தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்'' - (மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் ஏப்பிரல் - மே 2009 இல் சேலத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார ஊர்வலத்தில் ஆற்றிய உரையில் இருந்து)

- என்று நீங்கள் வெளியிட்ட கொள்கைப் பிரகடனம் யுத்தத்தினால் அழிந்து கொண்டிருந்த தமிழீழ மக்களுக்கு தாங்கள் காப்பாற்றப்படுவோம் என்ற பெரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.


இலங்கையில் கடந்த மூன்று வருடங்களாக மட்டுமல்ல கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தொடர்ந்தும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்படும் தமிழீழ மக்களைப் பாதுகாப்பதற்கு, தமிழீழ தேசத்தின் தனித்துவமான இறைமையை அங்கீகரிப்பதே ஒரே வழியாகும்.

ஈழத் தமிழ் மக்களை இன அழிவில் இருந்து நிரந்தரமாகப் பாதுகாப்பதற்காக

தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதனூடாக தமிழீழ தேசத்தின் தனித்துவமான இறைமையினை அங்கீகரிக்கும் தீர்மானத்தினை

தமிழக சட்டசபையில் தாங்கள் மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகின்றோம்.

தாங்கள் சபதம் எடுத்தால் சாதித்துக் காட்டியே தீருவீர்கள் என்பது அனைத்துத் தமிழ் மக்களதும் உறுதியான நம்பிக்கையாகும். தனிப் பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குத் தமிழக மக்கள் தங்களுக்கு ஆணை வழங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில், தங்களுக்குள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி, தாங்கள் கடந்த தேர்தல் காலத்தில் வழங்கிய ஆணையின் அடிப்படையில் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதனூடாக தமிழீழ தேசத்தின் தனித்துவமான இறைமையினை நிலைநாட்டும் வகையிலான தீர்மானத்தினை தமிழக சட்டசபையில் நிறைவேற்றுவதன் மூலம் தமிழீழ மக்களை இன அழிப்பில் இருந்து நிரந்தரமாகப் பாதுகாக்கும் புனிதமான பணியை மேற்கொள்வீர்கள் என உறுதியாக நம்புகின்றோம்.

தமிழீழ தேசத்தின் தனித்துவமான இறைமை அங்கீகரிக்கப்படுவதன் மூலம் தமிழீழ மக்களது நலன்கள் பாதுகாக்கப்படுவது மட்டுமல்ல, தமிழ் நாட்டினதும், இந்தியாவினதும் நலன்கள் பாதுகாக்கப்படுவதனையும் உறுதிப்படுத்துவதாக அமையும் என்பது எமது உறுதியான நம்பிக்கை.

தமிழீழ மக்களை இன அழிப்பில் இருந்து நிரந்தரமாகப் பாதுகாக்க தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் அடிப்படையில் தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளுக்கும் பூரணமான ஆதரவினை வழங்கவும், இணைந்து செயற்படவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாராக உள்ளது என்பதனை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றது.

கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புத் தொடர்பாக பூரணமான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும். அதற்காக உரிய தரப்புக்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் அவ்வாறான விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என்றும் நம்புகின்றோம்.

மூன்றாவது தடவையாக தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்றுள்ள தங்களுக்கு தமிழக மக்கள் வழங்கியுள்ள ஆணைக்கு மதிப்பளித்து தமிழகத்தில் நல்லாட்சியை ஏற்படுத்தவும், தங்களது வாக்குறுதிகளைக் காக்கவும் தாங்கள் உழைப்பீர்கள் எனவும் உறுதியாக நம்புகின்றோம். மீண்டும் ஒருதடவை தங்களை வாழத்தி விடைபெறுகின்றோம்.

நன்றி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (16-5-2011)

thanks to http://www.thenseide.com/cgi-bin/Details.asp?selNum=10&fileName=Jun1-11&newsCount=5
ஜெயலலிதா அம்மையாருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாழ்த்துSocialTwist Tell-a-Friend

No comments: