சிவகாசி, ஆக.6 (டிஎன்எஸ்) சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று (ஆக.5) ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸப்ர் வழக்குப் பதிவு செய்து ஆலையின் ஃபோர்மேன் செந்தில்குமாரைக் கைது செய்தனர்.
சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் கனகபிரபு என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு பேன்ஸி ரகப் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலையில் சுமார் 200 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
பிற்பகல் 2.30 மணி அளவில் தொழிலாளர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனராம். அப்போது மருந்துக் கலவை செய்யும் அறையின் வெளிப் பகுதியில் சிதறிக் கிடந்த மருந்தைச் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றதாகவும், அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்போது, ஓர் இடத்தில் சிறிய அளவில் தீப்பற்றியதாம். இதைப் பார்த்த 5 பெண் தொழிலாளர்கள் ஓர் அறையின் அருகே ஒதுங்கினார்களாம். அவர்கள் இருந்த இடத்துக்கும் தீ பரவியதால் அங்கிருந்து வெளியே வர முடியாமல் தீயில் சிக்கி, 5 பேரும் உயிரிழந்தனர். மேலும் அப் பகுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.
புதுக்கோட்டை சின்னாத் தேவர் மனைவி அங்கம்மாள் (50), அதே ஊரைச் சேர்ந்த முத்தையா மனைவி சண்முகத்தாய் (48), காடனேரி ஆவுடைத்தாய்(53), பிகாரைச் சேர்ந்த மம்தா (26), காடனேரி வீரம்மாள் (50), அம்மாபொண்ணு (40), வீரம்மாள் (50) ஆகியோர் உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த முருகன் (45), உஷ்மா (20), முனியாண்டி (45), பத்மாவதி (50), பாண்டி (53) ஆகியோர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்த அனைவரும் சிவகாசி அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். சிவகாசி தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்தைத் தகவல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மு.பாலாஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நஜ்மல் ஹோடா ஆகியோர் பார்வையிட்டனர். (டிஎன்எஸ்)http://aaraamthinai.com/news/newsitem.aspx?NEWSID=ca9ee0da-9d7f-4600-a9be-4657ce1abd33&CATEGORYNAME=TTN
read more...