சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட முறையை அறிய முனையும் நாடுகள் [ சனிக்கிழமை, 22 மே 2010, 08:50 GMT ] [ தி.வண்ணமதி ]

அளவில் சிறிய இலங்கைத் தீவு ஏதோவதொரு அம்சத்திற்கு இதுநாள் வரைக்கும் முன்மாதிரியாக விளங்கியதா என்றால் இல்லையென்றே கூறவேண்டும்.

ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை இல்லாதொழித்ததன் மூலம் சிறிலங்கா அரசாங்கம் முன் பழக்கப்படாத ஒரு கெளரவ நிலையில் தற்போது உள்ளது.

இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் புகழ்பெற்ற 'The Economist' என்னும் இதழ் எழுதியுள்ளது.
அது தொடர்ந்து எழுதியுள்ளதாதவது,

நெகிழ்வுப் போக்குடன் செயற்படாத உலகின் ஒருசில நாடுகள் தத்தமது நாடுகளில் நிலவும் கிளர்ச்சிசார் பிணக்குகளுக்குத் தீர்வுகாணும் வகையில் 'சிறிலங்காவில் கைக்கொள்ளப்பட்ட முறை' எதுவோ அது தொடர்பாக ஆராய்ந்து அறிவதற்கு விரும்புகின்றன.

அரிதாகவே வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் மியன்மாரது இராணுவச் சர்வாதிகாரியான தன் ஸ்வே [Than Shwe], கடந்த நவம்பரில் இலங்கைத் தீவுக்கான பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.

'கிளர்ச்சிசார் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் விடயத்தில் சிறிலங்காவினது அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், பர்மாவிலுள்ள இனக்குழுமங்களின் செயற்பாடுகளுக்கு எதிரான முனைப்புக்களை ஜெனரல் தன் ஸ்வே மேற்கொள்ளக்கூடும்' என இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய சரிதையாளரான பெனெடிக்ட் றோகேஸ் கூறுகிறார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இராணுவ வெற்றியொன்று சிறிலங்காவில் பெறப்பட்டிருப்பதை உலகம் கண்டிருக்கும் அதேநேரம் தனது நாட்டில் இடம்பெற்றுவரும் கிளர்ச்சிசார் போராட்டங்களை அது மறந்துவிட்டது என கடந்த ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் இடம்பெற்ற பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டில் மியன்மாரின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பினைத் தோற்கடித்ததன் மூலம் சிறிலங்கா கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பாக அறிந்துகொள்ளும் வகையில் தாய்லாந்தினது பிரதமர் அபிகிஸ்ட் விஜயவ [Abhisit Vejjajiva] சிறிலங்காவினது பிரதமருடன் கடந்த ஒக்ரோபரில் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார் [தென் தாய்லாந்தில் முஸ்லீம்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிளர்ச்சிகளுக்கு பாங்கொக் முகம்கொடுத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது].

சிறிலங்காவினது 'அமைதிக்கான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முனைப்பு' என அது வர்ணிக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினைத் தோற்கடிக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்த தொடர் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான குறிப்புக்களைப் பெறுவதற்காக கடந்த மார்ச்சில் கொழும்புக்கு பயணம் செய்த பங்களாதேசின் இராணுவத் தூதுக்குழு சிறிலங்காவினது இராணுவத் தளபதியுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது.
தத்தமது நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் மோசமான விளைவுகளைத் தரவல்ல பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் கொலம்பியா தொடக்கம் இஸ்ரேல் வரையிலான பலதரப்பட்ட நாடுகளையும் சேர்ந்த இராணுவ ஜெனரல்களும் அரசியல் வாதிகளும் சிறிலங்காவினது அனுபவத்தினைத் திரைமறைவில் பயன்படுத்துகிறார்கள் போலத் தெரிகிறது.

கிளர்ச்சிசார் முனைப்புக்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு; சிறிலங்கா கற்றுக்கொடுத்திருக்கும் பாடமானது மூன்று முக்கிய அம்சங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் தலைவர் லுயிஸ் ஆர்பர் கூறுகிறார்.

முதலாவது, 'நெகிழ்வுப்போக்கற்ற போர் மூலோபாயம் [படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விடயத்தில் இராணுவத்திற்குப் பூரண சுதந்திரத்தினையும் அதிகாரத்தினையும் வழங்குவது, பயங்கரவாதிகளுடன் எந்த பேச்சுக்கும் இடமில்லை என்ற நிலை மற்றும் குறித்த அமைப்புத் தங்களை மீள ஒழுங்கமைக்க இடமளிக்கும் வகையில் போர் நிறுத்தத்திற்குச் செல்ல மறுத்தல்].

இரண்டாவது, ஆயுதம் தரித்த போர் வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான வேறுபாட்டினைப் புறம்தள்ளி அனைவர் மீதும் இலக்கு வைத்தல் [அண்மையில் வெளிவந்த அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழுவினது அறிக்கை இதற்கான போதிய உதாரணங்களைக் கொண்டிருக்கிறது].

இறுதியாக, சர்வதேச மற்றும் ஊடகங்களின் கரிசனைகளுக்கு மதிப்பளிக்காது செயற்படுதல். 'ஊடகங்கள் அனைத்தும் எங்களின் கைகளில் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும். அமைதி முயற்சிக்கும் செல்லுமாறும் பேச்சுக்களில் ஈடுபடுமாறும் கோரி சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுப்பதை நாம் விரும்பவில்லை' என அதிபர் ராஜபக்சவினது செயலகத்தினைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்தியாவின் பாதுகாப்பு மீள்பார்வை Indian Defence Review என்ற சஞ்சிகையில் வெளிவந்த பத்தியொன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

'கிளர்ச்சிசார் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜபக்சவினது முறை இராணுவச் செயற்பாடுகளின் அடிப்படையிலானது....பயங்கரவாதம் என்பது இராணுவ ரீதியிலேயே இல்லாது ஒழிக்கப்படலாமேயன்றி அரசியல் ரீதியில் அல்ல' எனக்கூறி பத்தியாளரான வி.கே சசிக்குமார் தனது பத்தியை நிறைவு செய்கிறார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா கைக்கொள்ளும் மூலோபாயத்திற்கு நேரெதில் மாறான தன்மையினை இது கொண்டிருக்கிறது. இருப்பினும், உலகளாவிய ரீதியில் விடுதலைப் புலிகளின் கிளர்ச்சிளை முடிவுக்குக் கொண்டுவந்த சிறிலங்காவினது முறை தொடர்பில் சர்வதேச ரீதியில் அனைவரும் அறிய முற்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20100522101163
சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட முறையை அறிய முனையும் நாடுகள் [ சனிக்கிழமை, 22 மே 2010, 08:50 GMT ] [ தி.வண்ணமதி ]SocialTwist Tell-a-Friend

No comments: