“அந்த” மரபனுவும் ஆபத்தில் நம் ஆயுளும்?

“அந்த” மரபனுவும் ஆபத்தில் நம் ஆயுளும்?!



நம்ம எல்லாருக்குமே நூறு வருஷம் உயிர்வாழனுங்கிற ஆசை இருக்கும். ஆனா சில பேரு, “என்னது நூறு வருஷமா, இது என்ன ஆசையா இல்ல பேராசையா?” அப்படீன்னு கேக்கலாம். சரி, 100 வருஷங்கிறதே பேராசைன்னா, ஜப்பான் அமெரிக்கா போன்ற சில நாடுகள்ல 120/130 வருஷமெல்லாம் சில பேரு வாழுறாங்களே அதுக்கு பேரு என்ன?!

இம்மாதிரியான பயனில்லாத விவாதங்களை விட்டுட்டு, நூறு வருஷம் வாழுறவங்களுக்கும் அதுக்கு குறைவான ஆயுட்காலம் வாழுறவங்களுக்கும் என்ன வித்தியாசம்னு யோசிச்சோமுன்னா, அன்றாட வாழ்க்கையில் ஓவ்வொருவரும் செய்யும் சில/பல செயல்கள்தான் காரணம்னு புரியும்!

மூளை/மன ஆரோக்கியம் (Mental Well being)!

அதுல மிக முக்கியமானவை உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை அப்படீங்கிற ரெண்டும்தான்னு இதுவரையிலான, ஆயுட்காலம் குறித்த ஆய்வுகளும், அறிவியல் வரலாறும் வலியுறுத்தி வந்தன. ஆனா, நீண்ட ஆயுளுக்கு காரணமாக மூனாவதா ஒரு விஷயமும் இருக்குன்னு சமீபத்திய சில ஆய்வுகள் சொல்கின்றன. அது என்னன்னா, உடல் ஆரோக்கியமல்லாத, ஒவ்வொருவருடைய மூளை/மன ஆரோக்கியமான “Mental Well being” அப்படீங்கிறதுதான்!

மூளை/மன ஆரோக்கியம் பத்தின ஆய்வையும், அதன் செய்திகளையும் வெகு விரைவில், நாம ஒரு தனிப்பதிவுல பார்ப்போம். அப்போ, இந்தப் பதிவுல என்னத்த பார்க்கப் போறோம்?

உடல் ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடைய , அதை நேரடியாக பாதிக்கக் கூடிய “உறக்கம்” பத்தியும், உறக்கமின்மையால் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகள்(விளைவுகள்), மூளைபாதிப்பு, இவையனைத்தும் ஒரு சேர எப்படி நம் ஆயுட்காலத்தை வெகுவாக குறைத்துவிடுகின்றன அப்படீங்கிறதப் பத்தியும்தான் நாம இந்தப் பதிவுல விரிவா பார்க்கப்போறோம்!

நம் ஆயுட்காலமும் உயிரியல் கடிகாரமும்!

சமீபத்துல, Aging அப்படீங்கிற மருத்துவ மாத இதழ்ல வெளியான, அமெரிக்காவின் ஒரிகான் மாநில பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ட்ரோசோஃபிலா அப்படீங்கிற பழபூச்சியில மேற்கொள்ளப்பட்ட ஆய்வுல, (நம்) அன்றாட விழிப்பு-உறக்க (Circadian rhythms) நேர அளவுகளை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு மரபனு, ஆரோக்கியத்தையும், ஆயுட்காலத்தையும் (விரைவில் இறந்து போகும் அளவுக்கு) வெகுவா பாதிக்கிறதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க!

உயிரியல் கடிகாரம்/ உடலியக்க சுழற்ச்சி!



ஒரு உயிரினத்தின் உடலில், ஒவ்வொரு 24 மணி நேரமும் நிகழும், பல்வேறு விதமான உடலியக்க செயல்பாடுகளின் சுழற்ச்சியை உடலியக்க சுழற்ச்சி (Circadian rhythm) அல்லது உயிரியல் கடிகாரம் (Biological clock) என்றும் சொல்வதுண்டு! (பார்க்க படம்)

"மனித உயிரியல் கடிகாரம்/உடலியக்க சுழற்ச்சி" (படம்: Wikipedia)

மேலே இருக்குற படத்துல குறிப்பிட்டிருக்கிற விஷயங்களை (ஆங்கிலம்) பார்த்தோமுன்னா, அடிப்படையில உயிரியல் கடிகாரம்/உடலியக்க சுழற்ச்சி அப்படீங்கிறது என்னன்னு புரியும். சுருக்கமா சொல்லனும்னா, ஒரு நாளில் சூரிய ஒளியின் பாதிப்பினால், மனித உடலின் பல்வேறு பகுதியின் செயல்கள்/இயக்கங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன (நல்லவிதமாகவும்/தீயவிதமாகவும்) என்பதை காட்டும் ஒரு கடிகாரம்தான் இந்த உயிரியல் கடிகாரம்!

உதாரணத்துக்கு, ஒரு நாளில் நாம எப்போ தூங்குகிறோம்/எவ்வளவு நேரம் விழித்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து , நம் உடலின் பல்வேறு இயல்பான இயக்கங்களான, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், பல்வேறு என்சைம்/ஹார்மோன் சுரத்தல், கழிவுகளை வெளியேற்றும் தசைகளின் செயல்பாடு (சிறுநீரகம்), மூளை செயல்பாடு போன்றவை மாறுபடும். அதனால, நம்ம உயிரியல் கடிகாரத்தை நல்லபடியா வச்சிக்கலைன்னா, நமக்கு பல்வேறு உடல் உபாதைகள் வர வாய்ப்புண்டு!

உயிரியல் கடிகாரத்துக்கும் மூளைக்குமான தொடர்பு பற்றிய தெளிவான இந்த காணொளியையும் பாருங்க……

சரி இதுவரைக்கும் நாம, உயிரியல் கடிகாரம்னா என்ன, அது சரியாக பராமறிக்கப்படலைன்னா என்னவாகும் அப்படீங்கிறதையெல்லாம் பார்த்தோம். இனி (உயிரியல் கடிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய) பதிவுச் செய்தியை விரிவா பார்ப்போம்.

அனுவிலிருந்து மரபனுவரை……

கடந்த 1950-ஆம் ஆண்டுவரை, உயிரியல் ஆய்வுகள் எல்லாம் “அனுக்கள்” அளவில் மட்டும்தான் சாத்தியப்பட்டது என்பது உயிரியல் துறை வரலாறு. அந்தத் தடையை தகர்த்தெறிந்து, “அனுவைப் பிளந்து” அதனுள்ளிருக்கும் “மரபனு” என்னும் மகத்துவத்தை டி.என்.ஏக்களாக அடையாளம் காட்டிய பெருமை, மூலக்கூறு அறிவியல் விஞ்ஞானிகள் திரு.ஜேம்ஸ் வாட்சன் மற்றும் திரு.ஃப்ரான்சிஸ் க்ரிக் என்னும் இருவரையே சாரும்!

1950-களில் தொடங்கிய மரபனு ஆய்வுகள், படிப்படியாக வளர்ந்து பின் 1980-களிலிருந்து ஒரு அசுர வளர்ச்சியைக் கண்டு , இன்று மனிதன் தன் மரபனு அட்டையைப் பயன்படுத்தி, தன் மூலக்கூறுகளின் முழுமையான விவரங்களை சில நிமிடங்களில் தெரிந்துகொள்ளும் அளவுக்கு ஒரு அதிசயத்தக்க நிலையை அடைந்துள்ளது ஒரு உலக அதிசயமே என்றால் அது மிகையல்ல!

“கால” மரபனுவும் நம் ஆயுட்காலமும்!

இப்போ நமக்கு தெரியவேண்டியதெல்லாம், “கால” மரபனுன்னா என்ன, அதுக்கும் நம்ம ஆயுளுக்கும் என்ன சம்பந்தம்? உயிரினங்கள் ஏன் மூப்படைகின்றன அப்படீங்கிற ஒரு அடிப்படைக் கேள்வியோட பழப்பூச்சியில தன் ஆய்வைத் தொடங்கின திரு. நட்ராஜ் கிருஷ்ணன், ஒரே வகையான உளைச்சல்/பாதிப்புகளை, இளமையானவர்கள் மிகுந்த சிரமமின்றி சமாளித்து விட, முதியவர்கள் சமாளிக்க முடியாமல் தங்கள் ஆயுட்காலத்தை குறைத்துக்கொள்கிறார்கள் அப்படீன்னு கண்டுபிடிச்சிருக்கார்!

பழப்பூச்சிகளில் (Drosophila) மேற்கொண்ட இந்த ஆய்வில், “கால மரபனு (Period gene)” என்ற, உயிரியல் கடிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு மரபனுதான், ஒரு உயிரினத்தின், உளைச்சலை சமாளிக்கும் திறன் மற்றும் ஆயுட்காலத்துக்கு அடிப்படைக் காரணியாக உள்ளது அப்படீன்னு கண்டுபிடிச்சிருக்கார் ஆய்வாளர் கிருஷ்ணன்!

இந்த கால மரபனுவானது, பரிணாமத்தின் பல்வேறு நிலைகளில் உள்ள பல்வேறு உயிரினங்களிலும், மனிதனின் ஒவ்வொரு அனுவிலும் செயல்படுகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. உயிரியல் கடிகாரத்தை கட்டுப்படுத்தக்கூடிய நான்கு மரபனுகளில் ஒன்றான கால மரபனுவின் செயல்பாடானது,

* போதிய உறக்கமின்மை
* வேறுபட்ட பணிக்காலம் (Day or night shift work)
* ஜெட் லாக் என சொல்லப்படும் உலக நேர மாற்றம்

போன்ற ஏதேனும் ஒரு செயலினால் பாதிக்கப்படுகிறதாம். அதுமட்டுமில்லாம, திரிந்த/சேதமடைந்த கால மரபனுவினால், நடுவயது/வயதான உயிரினங்களின் ஆயுட்காலமானது 12 முதல் 20 விழுக்காடு வரை குறைந்துபோகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது! மொத்தத்தில், வயதாக வயதாக கால மரபனுவில் செயல்பாடு வெகுவாக குறைந்து, உயிரினங்களின் உளைச்சலை சமாளிக்கும் திறன் குறைந்து, நரம்புகள் சேதமடைந்து, அதன் விளைவாக ஆயுட்காலமும் வெகுவாக குறைந்துபோகிறது என்கிறது கிருஷ்ணன் அவர்களின் ஆய்வறிக்கை! என்ன கொடுமை சரவணன் இது?!

இந்தச் செய்தியின் ஆய்வறிக்கையை விரிவாகப் படிக்க இங்கு செல்லுங்கள்




Thanyou: http://padmahari.wordpress.com/2010/04/14/%
“அந்த” மரபனுவும் ஆபத்தில் நம் ஆயுளும்?SocialTwist Tell-a-Friend

No comments: