புதுக்கோட்டை: இலங்கை கடற்படையின் கொடூரச் செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள செல்வனேந்தலைச் சேர்ந்த மீனவர்கள் பாண்டியன், மணிகண்டன், மணிவண்ணன், பாஸ்கரன் ஆகியோர் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது அங்கு வந்த சிங்களக் கடற்படையினர், தமிழக மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் பாண்டியன் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். படகில் மொத்தம் 10 குண்டுகள் பாய்ந்துள்ளன. பாண்டியனுக்கு மார்பில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
சுட்டுக் கொல்லப்பட்ட பாண்டியனின் தந்தை சமீபத்தில்தான் மரணமடைந்தார். இதையடுத்து பாண்டியன்தான் தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார். தற்போது அவரும் உயிரிழந்து விட்டதால் அவரது குடும்பம் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளது.
தரங்கம்பாடியைச் சேர்ந்தவர் என்றாலும் ஜெகதாப்பட்டினத்தில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார் பாண்டியன்.
காலவரையற்ற ஸ்டிரைக்:
இதற்கிடையே, பாண்டியன் குடும்பத்திற்கு போதிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும், இதுபோன்று சுடப்படுவதைத் தடுக்க நிரந்தரமான உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்.
இதுதொடர்பாக இன்று மீனவர் சங்கங்கள் கூடி ஆலோசனை நடத்தவுள்ளன. இந்தப் போராட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களையும் இணைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
No comments:
Post a Comment