நெருக்கடியிலிருந்து உலக பொருளாதாரத்தை மீட்பது எவ்வாறு என்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தும் வகையில் உலகத் தலைவர்கள் சிங்கப்பூரில் இம்முறை நடைபெற்ற ஆசியப் பசுபிக் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளித்தல் வடகொரியா விவகாரத்தைக் கையாளுதல் என்பனவும் ஆசிய பசுபிக் பொருளாதார மாநாட்டின் கலந்துரையாடலில் முக்கியப்படுத்தப்பட்ட விடயங்களாகும்.
ஆனாலும் அபெக் எனப்படுகிற ஆசிய பசுபிக் பொருளாதார உச்சிமாநாடு காலநிலை மாற்றம் தொடர்பில் எந்தவிதமான தீர்வும் எட்டப்படாத நிலையில் நிறைவுக்கு வந்திருக்கிறது.
20 நாடுகளின் தலைவர்கள் பங்கு பற்றிய ஆசியபசுபிக் பொருளாதார மாநாட்டின் முடிவுகளிலிருந்து எதிர்வரும் டிசெம்பர் மாதம் டென்மார்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தையொட்டியதாக இம்மாநாட்டில் காலநிலை மாற்ற உடன்படிக்கையொன்று செய்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இருப்பினும் 2050 ஆம் ஆண்டுக்குள் பச்சை இல்ல வாயுக்களை குறைப்பது தொடர்பான இலக்கு சம்பந்தமாக உடன்படிக்கையொன்றை உருவாக்குதல் என்ற திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவே அறியமுடிகிறது.
ஆனாலும் இது தொடர்பான முடிவினை 2010 ஆம் ஆண்டு டோஹாவில் நடைபெறவுள்ள உலகளாவிய வாணிப பேச்சுவார்த்தைகளின் போது காணலாம் எனத் தீர்மானித்துள்ளனர்.ஆசியபசுபிக் பொருளாதார மாநாட்டின் முடிவில் பெரியளவில் முக்கியப்படுத்திச் சொல்லக் கூடிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லையாயினும் உலக காலநிலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் சர்ச்சைக்குரியதாகவே கொள்ளப்படுகிறது.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கும் அபிவிருத்தியடை ந்த நாடுகளுக்கும் ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் காலநிலை மாற்றம் சம்பந்தமாக பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது இப்போதைய நிலையில் கடுமையானதொரு பிரச்சினையாகவேயுள்ளது.
பச்சை இல்ல வாயுக்களை 50 சதவீதத்தால் குறைப்பது தொடர்பான இலக்கு உலகளாவிய சமூகங்களைப் பொறுத்தவரை மிகவும் தேவையான ஒன்றாக இருக்கையில் சர்ச்சைக்குரிய பிரச்சினையாக அது இருப்பதானது உலகில் ஏற்படப்போகும் வீணான தொல்லைகளுக்கு ஏதுவானதாகவே அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கிடையில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை மையப்படுத்தி வடகொரியாவை அடக்கிவைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது என்பதற்கு ஆசியா பசுபிக் மாநாட்டுக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமõ மேற்கொண்ட நடவடிக்கைகளிலிருந்து தெரியவருகிறது.
ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வேடேவ் மற்றும் ஒபாமா ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின் அடுத்து ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்திருந்த நாங்கள் எதிர்வரும் டிசெம்பரில் ஆயுத உடன்படிக்கை தொடர்பில் இறுதி முடிவு எடுக்க முடியும் என்ற கருத்து மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
இரு நாடுகளுக்குமிடையில் உள்ள தந்திரோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் எதிர்வரும் டிசெம்பர் 5 ஆம் திகதி காலாவதியாகிறது. இதற்குப் பதிலாக புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தும் முகமாக மேற்படி இரு உலகத் தலைவர்களும் ஏற்கனவே பேச்சு நடத்தியிருக்கின்றனர். இருந்த போதும் அபெக் உச்சிமாநாட்டையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வேடேவும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர்.
இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆசிய சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக ஜப்பான் சென்ற வேளை பிராந்திய பாதுகாப்பு தொடர்பான அமெரிக்காவின் உறுதிமொழி அசைக்க முடியாதது என்று குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் ஆசியாவில் பாரிய பொருளாதாரமாக வளர்ந்துவரும் சீனாவுடன் நடைமுறை சாத்தியமான பொருளாதார ஒத்துழைப்புக் கொள்கையை அமெரிக்கா தொடர விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
பசுபிக்கிலுள்ள தமது அயல் நாடுகளை விட கிழக்கு ஆசிய நாடுகள் நிதி நெருக்கடியிலிருந்து விரைவாக மீண்டு வருகின்ற போதும் அமெரிக்கச் சந்தையில் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இந்நாடுகள் ஒபாமாவிடமிருந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கான சமிக்ஞைகளை எதிர்பார்த்திருப்பதாக அவதானிகள் கூறுகின்றனர்.
ஆனாலும் சீனாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உலகம் எதிர்கொண்டுள்ள மிக முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் இணைந்து செயற்படுவதற்கு விடுத்த அழைப்பிற்கு சீனத் தலைவர்கள் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர்.
இதில் காலநிலை மாற்றம் தொடர்பில் அடுத்த மாதம் கொபன்ஹேகனில் நடைபெறவுள்ள மாநாட்டில் விரிவான உலகளாவிய உடன்படிக்கையொன்று எட்டப்படவேண்டியமை, வடகொரியாவின் அணுநிகழ்ச்சித் திட்டம் தொடர்பான பேச்சுகளில் வடகொரியாவை மீண்டும் பங்குபற்ற வைப்பதற்கான அழுத்தங்களை கொடுப்பது போன்றன முக்கியப்பட்டிருக்கின்றன.ஒபாமாவுக்கும் சீன ஜனாதிபதி ஹூஜிந்தாவோவுக்கும் இடையில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மண்டபத்தில் இருமணிநேரம் நடைபெற்ற சந்திப்பில் இந்த இணக்கம் ஏற்பட்டிருக்கிறது.
உலக அரங்கில் சீனா தற்போது முக்கிய பாத்திரத்தை வகித்து வருகின்றனது. ஆனாலும் ஜப்பானுக்கு எதிரியான நாடாகவே இருந்து வருகிறது. காலநிலை மாற்றம் தொடக்கம் அணுவாயுதப் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி வரை 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய சவால்களுக்கான தீர்வை ஒரு நாட்டினால் மட்டும் எட்டமுடியாது என்ற உண்மை மாத்திரம் உண்மை என்ற நிலையில் அமெரிக்கா முக்கியப்படுத்தப்படுகின்ற நாடான சீனாவையும் இதில் இழுத்துக் கொள்ளப்பார்க்கிறது என்பதே முக்கியமானது.
இதே வேளை விடாப்பிடியாக இருக்கும் சீனாவின் திபெத் விவகாரத்தினைப்பற்றியும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ள போதும் வர்த்தகப் பாதுகாப்புக் கொள்கையை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென அழைப்பு விடுத்துள்ள ஹூ ஜிந்தாவோ சமத்துவம், பரஸ்பரம், மரியாதை மற்றும் மற்றைய நாடுகளின் உள்நாட்டு விடயங்களில் தலையிடாத கொள்கை என்ற தத்துவத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் தொடர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபடுமென தெரிவித்திருக்கிறார்.
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அரசியல் ரீதியற்ற உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவதே நோக்கம் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருக்கின்ற போதும் அரசியல் மயப்படாத எந்தச் செயற்பாடும் நடைபெறுவதாகத் தெரியவில்லை.
ஆசியப் பசுபிக் பிராந்திய பொருளாதார மாநாட்டிற்கு வந்த ஒபாமõ சீனாவுக்குச் செல்லவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்று சிந்தித்தால் இதற்கான பதில் கிடைத்துவிடும்.
தேங்க்ஸ் TO http://tharakai.wordpress.com/2009/11/20/ஆசிய-பசà¯à®ªà®¿à®•à¯-பொரà¯à®³à®¾à®¤à®¾à®°-à®®/
No comments:
Post a Comment