மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை: சேதுராமன்

சென்னை : ""மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேதுராமன் தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள, மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் கதிரவன் வந்தார். அவரை தொடர்ந்து அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேதுராமன், பொதுச்செயலர் இசக்கிமுத்து, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் வந்தனர். தொடர்ந்து இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், துணை செயலர் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலர் ராமகிருஷ்ணன் மற்றும் டி.கே.ரங்கராஜன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர்.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர். கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதி அடையாளம் காணும் பங்கீடு முடிக்காமல், அ.தி.மு.க., தன்னிச்சையாக தொகுதிகளை அறிவித்தது குறித்து கூட்டத்தில் கலந்துக் கொண்ட தலைவர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். பின், அனைவரும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தலாம் என, அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து தலைவர்கள் வரிசையாக தே.மு.தி.க., அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.

வெளியே வந்த கதிரவன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ""அ.தி.மு.க., அணியில் எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடுவது குறித்து, அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். உடன்பாடு ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்குள் உசிலம்பட்டி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். நாங்கள் தேசிய அளவில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்திருப்பதால், இரு கம்யூ., கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினோம். எங்கள் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்,'' என்றார்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேதுராமன், ""தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் ஒரே நோக்கம். அதற்காக எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒட்டு மொத்தமாக தமிழக மக்களின் நலன் கருதி தேர்தலில் எந்த பிணக்கு இன்றி பணியாற்றுவோம். மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என்றார்.
thanks to http://election.dinamalar.com/election_news_detail.php?id=514
மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை: சேதுராமன்SocialTwist Tell-a-Friend

No comments: