திருமங்கலம் அருகே தீண்டாமை காரணமாக கலவரம்: துப்பாக்கி சூடு 45 பேர் கைது 150 பேர் மீது வழக்குப் பதிவு

thanks to http://www.inneram.com/2011050216136/2011-05-02-15-33-28
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ளது வில்லூர் கிராமம். இந்த கிராமத்தின் மெயின் பஜார் வழியாக ஒரு பிரிவினர் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் செல்வதற்கு இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள்.   இது தொடர்பாக அவ்வப்போது பிரச்சனை ஏற்படுவதும் சமரச பேச்சு நடத்தப்படுவதுமாக இருந்துள்ளது.  எனினும் பிரச்சனை முழுமையாக தீர்க்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வில்லூரை சேர்ந்த தங்கப் பாண்டியன் (வயது27)  என்பவர் மோட்டார் சைக்கிளில் மெயின் பஜார் வழியாக சென்றுள்ளார்.   தங்கப்பாண்டியன் ஒத்தப்பட்டி தெருவை அடைந்த போது, அந்த பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், , கரந்தமலை, சமயன், பிரதாப் சிங் மற்றும் பாலமுருகன் ஆகிய 5 பேரும் சேர்ந்து தங்கப்பாண்டியனை வழிமறித்து அத்தெரு வழியாக வரக்கூடாது என்று கூறி தகராறு செய்துள்ளனர்.


எனவே, தங்கப்பாண்டியன்அவர்கள் 5 பேரும் தன்னை ஜாதி பெயரை சொல்லி தகராறு செய்து திட்டியதாக காவல் துறையில் புகார் கொடுக்கவே, அவர்கள்  5 பேரையும் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்தது.   இந்நிலையில் அவர்களை சேர்ந்தவர்கள் 5 பேரையும் விடுவிக்கக் கோரி காவல்நிலையம் முன்பு திரண்டு கோஷமிட்டனர்.   இதற்கிடையில் புகார் கொடுத்தவரின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது.  எனவே இரு தரப்பிலும் பதட்டநிலை ஏற்பட்டு கலவர சூழல் உருவானது.  நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே பாதுகாப்புக்காக கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர்.


காவல்துறையின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  அப்போது அங்கு  கும்பலாக கூடியிருந்தவர்கள் காவல்துறையின் வாகனங்கள் மீது   கல் வீசி தாக்கினர்.  கல்வீச்சில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களும் காயமடைந்தனர்.  தடியடி நடத்தியும், நிலைமை கட்டுக்குள் வராததால் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.  ஆனாலும் கும்பல் கலையாததால் 2 தடவைகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.


நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் காளிமுத்து என்ற வாலிபருக்கு தொடையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால், படுகாயமடைந்தார். மேலும் நடத்தப்பட்ட தடியடியிலும் பலர் காயமடைந்தனர்.   காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இக்கலவரம் தொடர்பாக 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் 45 பேரை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது.  மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கடுமையான அளவில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


thanks to http://thatstamil.oneindia.in/news/2011/05/03/police-warn-stern-action-against-untouchability-aid0090.html

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வில்லூர் கிராமத்தில் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்ட 54 பேர் கைது செய்யப்பட்டனர்.


டி.கல்லுப்பட்டி அருகே உள்ள இந்த கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு, இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தினர். ஆனால், கலவரம் நீடித்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இச்சம்பவத்தில் மதுரை மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கர்க், பேரையூர் டி.எஸ்.பி. அன்வர் ஷா ஆகியோரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கலவரக் கும்பல் கற்களை வீசித் தாக்கியதில் 15க்கும் மேற்பட்ட போலீஸாரும் காயமடைந்தனர்.

போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் செந்தில் மற்றும் பழனி ஆகியோர் காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கலவரம் குறித்து ஐ.ஜி. மஞ்சுநாதா நிருபர்களிடம் கூறுகையில், வில்லூர் கிழக்குத் தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்ற தங்கபாண்டியன் என்பவரை சிலர் தடுத்து நிறுத்தி பைக்கை பறித்துள்ளனர். இதுதொடர்பாக, 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அவர்களுடன் எஸ்.பி. அஸ்ரா கர்க் பேச்சு நடத்தினார். பேச்சுவார்த்தையில் அமைதி ஏற்படுத்தப்பட்ட நிலையில் இன்னொரு பிரிவினரது வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன.

மேலும், வில்லூர் காவல் நிலையத்துக்கு ஆயுதங்களுடன் திரண்டு வந்த சிலர் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். எஸ்.பி. மற்றும் பேரையூர் டி.எஸ்.பி. ஆகியோரது கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதையடுத்து கலவரக் கும்பலைக் கலைக்க தடியடி,கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கலவரக்காரர்கள் 45 பேர் கைது செய்யப்பட்டு 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 150 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி கோட்டாட்சியர் புகழேந்தி, திருமங்கலம் தாசில்தார் பரமேஸ்வரி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வில்லூரில் முகாமிட்டுள்ளனர். 5 மாவட்டங்களில் இருந்து ஆயுதப் படை போலீஸார் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரட்டை டம்ளர் முறை, வாகனங்களில் குறிப்பிட்ட தெருவுக்குள் செல்லக் கூடாது என யாராவது தீண்டாமைக் கொடுமையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஐ.ஜி.
திருமங்கலம் அருகே தீண்டாமை காரணமாக கலவரம்: துப்பாக்கி சூடு 45 பேர் கைது 150 பேர் மீது வழக்குப் பதிவுSocialTwist Tell-a-Friend

No comments: