சிதம்பரம்:
மூவேந்தர் முன்னேற்றக்கழக அவசர செயற்குழு மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மூ.மு.க.தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது மூவேந்தர் முன்னேற்றக்கழக .தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் பேசியது:-
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நாம் கடுமையாக உழைத்தோம்.கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபட்டோம். எனக்காக கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்தனர்.அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த தேர்தலில் நான் தோல்வி அடைந்ததால் தவறான பாதையில் சென்று விட்டதாக சிலர் கூறி வருகிறார்கள். நான் மட்டும் அல்ல, தி.மு.க.கூட்டணியிலும் 200-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தோல்வியை தழுவி விட்டார்கள். மக்களின் எண்ணம் மாறி விட்டது.ம க்களின் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம். தலை வணங்குவோம். இனி வரும் தேர்தலில் மக்களை கவரும் வகையில் செயல்பட வேண்டும்.
நாங்கள் தவறான பாதையில் (கூட்டணி) செல்ல வில்லை. தி.மு.க.கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் 10 தொகுதிகளிலும் தோல்வி அடைந்து விட்டது. பா.ம.க. 3 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் 63 தொகுதிகளில் 5 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதைவைத்து நாம் தவறான பாதையில் சென்று விட்டோம் என்று கூற முடியாது. நாம் தவறான முடிவும் எடுக்கவில்லை. தி.மு.க.தலைவர் கருணாநிதி நாம் வைத்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளார். அதன் அடிப்படையில் தான் நாம் தி.மு.க.கூட்டணியில் சேர்ந்து உள்ளோம். மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்.அ தனால் நாம் தோல்வி அடைந்து விட்டோம். விரைவில் எம்.பி.தேர்தல் வரப்போகிறது. அதற்கு நாம் ஓராண்டுக்கு முன்பே தயாராக இருக்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலிலும் நாம் அதிக இடங்களில் போட்டியிட தயாராக வேண்டும். அடுத்த தேர்தலில் சரியான பாதையில் செல்ல வேண்டும். நமது கட்சி நிர்வாகிகள் யாருடைய அச்சுறுத்துதலுக்கும் பயப்பட தேவையில்லை .மதுரை விமான நிலையத்திற்கு முத்து ராமலிங்கத்தேவர் பெயர் சூட்ட வேண்டும். அகமுடையார், கள்ளர், மறவர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். காவிரி நதிநீர்ப்பிரச்சினையை தீர்க்க வேண்டும். முல்லை பெரியாறு பிரச்சினையை தீர்க்க வேண்டும்.இதையெல்லாம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா செய்து கொடுப்பாரா? அப்படி செய்து கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அனைத்தும் போராடுகிற நிலையில் நிலுவையில் உள்ளது.
அடுத்த சட்டசபை தேர்தலில் நாம் கேட்கிற தொகுதிகள் தி.மு.க., அ.தி.மு.க. விடம் இருந்து கிடைக்க வில்லையென்றால் நாம் நமக்கென்று 25 தொகுதிகளை இப்போதே தயார் செய்து வைத்து கொள்ளுங்கள். 25 தொகுதிகளில் நாம் போட்டியிட்டு வெற்றி பெறலாம்.அ தன்பிறகு நாம் கேட்காமலேயே நமக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். சிதம்பரம் தொகுதியில் எனக்கு அனைத்து சமூகத்தினரும் வாக்கு அளித்து உள்ளனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா சொன்ன வாக்குறுதிகளை 1 ஆண்டுகளில் நிறைவேற்றுவேன் என்று கூறினார்.ஆனால் பதவி ஏற்று 7 வாக்குறுதிகளை மட்டும் உடனடியாக நிறை வேற்றுவதாக கூறியுள்ளார். ஆனால் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவி, கான்கிரீட்வீட்டுக்கு கூடுதல் நிதி உதவி போன்ற நல்ல திட்டங்களை நிறை வேற்றவில்லை.ஆகவே நாம் விரைவில் இது போன்ற மக்கள் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். இவ்வாறு மூ.மு.க.தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் கூறினார்.
கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளர் கேப்டன் நடராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் செல்வராஜ், மாநில பொருளாளர் அபிராமம் கோவிந்தசாமி, மாநில இணை தலைவர் ஆறுமுக நாட்டார், இணை செயலாளர் ராஜா, முத்து, மறவன்நடராஜன், ஐரோப்பிய மாணவரணி தலைவர் கோகுல்வாண்டையார், மாவட்ட இளைஞரணி வேல்ராஜ், மதியழகன், மதுரை சுரேஷ், நாகவேல், ஜோதி மணி உள்பட தஞ்சை, நாகை, திருவாரூர், திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
சட்டசபை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட தலைவர் ஸ்ரீதர்வாண்டையாருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, ஐ.நா.சபையின் அறிக்கையின்படி போர்க்குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சேவை உடனடியாக சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்ரோல் ,டீசல் மற்றும் அத்தியாவசியப்பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும். காவிரி டெல்டா பாசனத்திற்கு தங்கு தடையின்றி தண்ணீர் திறந்து விட வேண்டும்.கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையாருக்கு முழு அதிகாரம் அளிக்கிறது.
அதன்படி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட பொதுச் செயலாளர் ராமசுப்பிரமணிய காடுவெட்டியார், இளைஞர் அணி துணை தலைவர் சிற்றரசு, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் இந்திரக்குமார் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் இருந்துநீக்குவதற்கு முழு ஆதரவு அளிப்பது, சாதி வாரியாக கணக்கு எடுக்கும் பணிக்கு உத்தரவிட்ட மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கட்சி புதிய மாநில பொதுச்செயலாளராக கேப்டன் நடராஜன், மாநில இணை தலைவராக ஆறுமுக நாட்டார், மாநில துணை தலைவராக ஒச்சாயி தேவர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
thanks to http://cuddalore-news.blogspot.com/2011/05/blog-post_25.html
No comments:
Post a Comment