நல்லக்கண்ணுக்கு "தர்மத் தலைவர்' விருது

திருநெல்வேலி : இந்திய கம்யூ., கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் நல்லக்கண்ணுக்கு, "தர்மத் தலைவர்' என்ற விருதை, மகாத்மா காந்தி உதவியாளர் கல்யாணம் வழங்கினார். நல்லக்கண்ணு, பொதுமக்கள் நலனுக்காக, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளார். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்து, அவரே ஆஜராகி வாதாடினார்.
கோர்ட் உத்தரவுப்படி, இந்த ஆற்றிலுள்ள ஐந்து குவாரிகளில், நிபுணர் குழு ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்தது. அறிக்கையை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், ஐந்து ஆண்டுகளுக்கு, இக்குவாரிகளில் மணல் அள்ளத்தடை விதித்தது. தாமிரபரணியை காப்பாற்ற, நல்லக்கண்ணு எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது.
விருது வழங்கல்: இதையடுத்து நேற்றிரவு பாளையங்கோட்டையில், தாமிரபரணி அமைப்பு சார்பில், நல்லக்கண்ணுக்கு, பாராட்டு விழா நடந்தது. அந்த அமைப்பின் அகில பாரத தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் வரவேற்றார். முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், தஞ்சை பல்கலை., ஆட்சிக்குழு உறுப்பினர் பரமசிவன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., பேராசிரியர் அருணாச்சலம், அறக்கட்டளை நிர்வாகிகள் பேசினர். மகாத்மா காந்தி நேரடி உதவியாளர் கல்யாணம், நல்லக்கண்ணுக்கு, "தர்மத் தலைவர்' என்ற விருதை வழங்கினார். நல்லக்கண்ணு ஏற்புரை வழங்கினார்.

thanks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=235932


என்னை அரசியலை விட்டே ஓடச் சொன்னார்கள்: ஆர். நல்லகண்ணு பேச்சு

தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ளத் தடை உத்தரவு பெற்றுத் தந்ததற்காக ஆர். நல்லகண்ணுவுக்குதாமிரபரணி அமைப்பு சார்பில் பாளையங்கோட்டை ஜவாஹர் மைதானத்தில் நேற்று இரவு பாராட்டு விழா நடந்தது.

அப்போது நல்லகண்ணு பேசியதாவது,

மனிதன் இன்று தான் அனுபவிக்கும் இயற்கை வளங்களை எதிர்கால சமுதாயத்திற்கும் விட்டுச் செல்ல வேண்டும். அதை தன் வாழ்நாளிலேயே அழித்துவிடக் கூடாது.

தமிழ் வளர்த்த பெருமை உடைய ஆறு தாமிரபரணி. ஆற்றங்கரையோரங்களில் தமிழ் மொழி செழித்து வளர்ந்துள்ளது. அத்தகைய நதியை நாம் பாதுகாக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இன்று காவிரி, வைகை, பாலாறு ஆகிய நதிகள் அழிந்து வருகின்றன. இந்த நதிகளில் எல்லாம் இப்போது தண்ணீர் வருவதில்லை. காவிரி நதியில் ஆடிப் பெருக்குக்குக் கூட தண்ணீர் வருவதில்லை.

பாலாறு பாழடைந்து விட்டது. வைகைக்கும் சிக்கல் வந்து விட்டது. தாமிரபரணி மட்டுமே தகராறு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

செல்வம் செழிக்கும் ஜீவநதியான தாமிரபரணி தான் செல்லும் இடங்களில் எல்லாம் வளமையை ஏற்படுத்துகிறது. ஆனால் அதன் தன்மை இன்று கெட்டு விட்டது. அதைப் பாதுகாக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தாமிரபரணியை பாதுகாக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. இந்த ஆற்றில் மணல் அள்ள நான் தடையாணை வாங்கியதை கண்டித்து சிலர் 'அரசியலை விட்டு ஓடு' என்று சுவரொட்டிகள் ஒட்டினர். அதை யார் ஒட்டினார்கள் என்று எனக்கு தெரியும். அவர்கள் பிறப்பதற்கு முன்பே நான் பிறந்தவன், அரசியலுக்கு வந்தவன்.

தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதைத் தடுக்க நாம் உறுதி கொள்ள வேண்டும். நீதிமன்ற தடையாணையை அகற்ற முயற்சிகள் நடந்து வருகின்றது. அதை முறியடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நாம் அனைவரும் உறுதியாக இருந்தால்தான் தாமிரபரணியை பாதுகாக்க முடியும் என்றார்.

thanks to http://thatstamil.oneindia.in/news/2011/05/04/people-asked-me-get-away-from-politics-nallakannu-aid0128.html

நல்லக்கண்ணுக்கு "தர்மத் தலைவர்' விருதுSocialTwist Tell-a-Friend

No comments: