உசிலம்பட்டி, ஜூலை 14: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் புதன்கிழமை பந்த் நடைபெற்றதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பஸ், ஆட்டோ மினி வேன் இயங்கவில்லை. அரசு பஸ்கள் மீது சில விஷமிகள் கல்வீசித் தாக்கினர். இதில் 29 பஸ்கள் சேதமடைந்தன. சாலை மறியலில் ஈடுபட்டதாகவும், கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் 54 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டக் கோரி, பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.ஏ.முருகன்ஜீ தலைமையில் புதன்கிழமை தென்மாவட்டங்களில் பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உசிலம்பட்டி, செக்கானூரணி மற்றும் அப்பகுதி கிராமப்புறங்களில் காலை 6 மணி முதல் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ், ஆட்டோ, மினி வேன், கார் இயங்கவில்லை.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
அரசு பேருந்துகள் மட்டும் காலையில் இயக்கப்பட்டன. ஆனால், உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமப் பகுதியில் மதுரையிலிருந்து கம்பம் சென்ற அரசு பேருந்து மீது சிலர் கல் வீசித் தாக்கியதில் அதன் கண்ணாடி உடைந்து ஓட்டுநர் காயம் அடைந்தார்.
இதே போல் உசிலம்பட்டியிலிருந்து மறவபட்டி சென்ற நகர் பேருந்தின் கண்ணாடி கல் வீசி உடைக்கப்பட்டது. பொட்டுல்பட்டி விலக்கு பகுதியில், பண்ணைபட்டி விலக்கு, திருமங்கலம் விலக்கு, செக்கானூரணி போலீஸ் சரகத்திற்கு உள்பட்ட முதலைக்குளம், விக்ரமங்கலம் பிரிவு உள்ளிட்ட பகுதியில் 29 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாக போக்குவரத்துப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
பேருந்துகள் மீது கல் வீச்சு சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த போலீஸôர், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி (20), ஜெயக்குமார் (23), பாலமுருகன் (20), மகேந்திரன் (22), ராமசாமி (28), செக்கானூரணி பகுதியைச் சார்ந்த சுரேந்திரன் (37), முருகன் (32), செல்லபாண்டி (37), தமிழ்பாண்டி (35) உள்ளிட்ட 33 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல, உசிலம்பட்டி, செக்கானூரணி, மதுரை அவனியாபுரம் பகுதியில் சிலர் சாலை மறியலுக்கு முயன்றனர். அவனியாபுரம் பகுதியில் அரசு பேருந்து மீது சிலர் கல்வீசியதாகக் கூறப்படுகிறது.
மதுரை புறநகர் பகுதியில் புதன்கிழமை மட்டும் பந்த் மற்றும் மறியல் தொடர்பாக செக்கானூரணியில் 7 பேரையும், அவனியாபுரத்தில் 8 பேரையும் கைது செய்துள்ளதாகவும், உசிலம்பட்டியில் பேருந்து மறியல் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். புறநகர் பகுதிகளில் பேருந்துகள் மீது கல்வீசிய சம்பவத்தை அடுத்து 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புறநகர் போலீஸ் எஸ்.பி.மனோகரன் தெரிவித்தார்.
உசிலம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.புதன்கிழமை மாலைக்குப் பின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
thanks
n.t.r.thevar
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment