இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள், ‘குற்றப் பரம்பரை’க்காக. பாரதியும் ராஜாவும் பெயரைப் போலவே, நகமும் சதையுமாய், கதையும் இசையுமாய் தமிழ்த் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள். எழுபதுகளின் மத்தியில் தங்கள் திரைப் பயணத்தைத் துவங்கிய இந்த ராஜாக்கள், 24 ஆண்டுகள் தமிழ் ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு தனி ராஜாங்கமே நடத்தினர். 16 வயதினிலே படம் முதல் பல படங்களில் இருவரும் இணைந்து மயக்கினர். ‘வேதம் புதிது’ படம் இந்த இமயங்களின் பாதை புதிது என்று காட்டியது. இருவரும் பிரிய ஒரு காரணமாயும் அமைந்தது. அதைத் தொடர்ந்து மூன்று படங்களில் வெளி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய பாரதியால், ராஜாவின் இடத்தை நிரப்பவே முடியவில்லை. இதையடுத்து ‘என் உயிர்த் தோழ’னில், தன்னுயிர் தோழனோடு மீண்டும் இணைந்தார் பாரதி.
ஆனால் இருவராலுமே மீண்டும் அந்த பழைய ‘மாஜிக்’கை நிகழ்த்த முடியாமல் போனது தமிழ் ரசிகர்களின் துரதிருஷ்டம்!
‘இந்த இரு சிகரங்களும் இனி இணையவே மாட்டாகளோ…’ என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில்தான், பாரதி தானாகவே முன்வந்து, ‘ராஜாவின் இசையின்றி தன் படங்கள் முழுமை பெறாது’ என்பதை பகிரங்கமாய் அறிவித்தார். அதுவும் இன்னொருவர் (ஹிமேஷ் ரேஷம்மையா ) இசையமைத்த தனது ‘பொம்மலாட்டம்’ பட பாடல் வெளியீட்டு விழாவில்.
இந்த விழாவில் இளையராஜாவும், தனது நட்பு குறித்து உருகினார். இப்படி இவர் பேசியதே இல்லை என்று கூட கலந்து கொண்ட கலைஞானி கமல்ஹாசனே வியப்பாக கூறும் அளவுக்கு இளையராஜாவின் பேச்சு இருந்தது.
இந் நிலையில் இரு ராஜாக்களும் மீண்டும் இணைகின்றனர். தமிழ் சினிமாவுக்கு புதிய ராஜகோபுரம் கட்டப்படவுள்ளது. பாரதிராஜாவின் கனவுப் படமான ‘குற்றப் பரம்பரை’க்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக் கொண்டுள்ளார்.
வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் வாழ்ந்த பிரமலைக் கள்ளர் இன மக்கள் பிறப்பாலேயே குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர். இம்மக்களின் கைரேகைகளைப் பதிந்து கொண்ட போலீசார், தினசரி மாலையானதும் ஆண்களை மட்டும் ஒட்டுமொத்தமாக அள்ளிக் கொண்டு போய் விடுவார்களாம். காரணம் இரவுகளில் திருடுவது இவர்களில் சிலருக்கு தொழிலாக இருந்ததால்.
இந்த நிலையிலிருந்து பிரமலைக் கள்ளர் இனம் எப்படி மீண்டது என்பதை மதுரை மண்ணின் ஈரமும் வீரமும் மணக்க மணக்கச் சொல்லும் படம்தான் ‘குற்றப் பரம்பரை’.
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய பாரதிராஜா,
“இந்தப் படத்தை எனது 30 ஆண்டு கால திரையுலகப் பயணத்தில் மற்றுமொரு புதிய பரிமாணமாகப் பார்க்கிறேன். தமிழக வரலாற்றில் ஒரு முக்கியப் பதிவாக இந்தப் படம் அமையும். இளையராஜா மட்டுமல்ல, இன்னும் சில இனிய ஆச்சர்யங்களும் படத்தில் உண்டு” என்றார்.
அது என்ன ஆச்சரியம் என்று வியந்து போய் நாம் புலனாய்ந்து பார்த்தபோது, பாரதிராஜாவையும் இளையராஜாவையும் பெரிதும் நேசிக்கும் இயக்குநர்கள் சேரன், அமீர் இருவருமே இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்று தெரிய வந்தது. இதில் கமல்ஹாசனும் இருக்கிறார் என்பது இன்னொரு ஆச்சர்யம். மன மாச்சரியங்கள் மாய்ந்து போகும்போது ஆச்சரியங்களுக்கு வாய்ப்புகள் அதிகம்தான்.
இரு ராஜாக்களும் இணைந்து படைக்கப் போகும் இந்த குற்றப் பரம்பரை, இன்னும் பல பரம்பரைகளுக்கு மறக்க முடியாத வரலாற்றுப் பெட்டகமாக இருக்கப் போவது நிச்சயம்.
thanks to http://www.nitharsanam.net/?p=6955&sess=fea975c01dc2eb50a6a56ccf8135ebce
No comments:
Post a Comment