இதுவன்றோ பாதுகாப்பு வளையம் -முனைவர் மு.இளங்கோவன்
பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டின் முடியுடை மூவேந்தரும் குறுநில மன்னர்களும் தங்களுக்குள் பூசல் ஏற்பட்டுப் போர் நடைபெற்ற சூழலில் குடிமக்களை வருத்தாமல் போர் செய்துள்ளமையை நம் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.அவற்றுள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ள ஒன்பதாம் பாடல் தமிழர்களின் அறவுணர்வு மீறாப் போரியல் பற்றி விளக்குகிறது.

மக்களை எதிரியாக நினைத்துக் கரிக்கட்டைகளாக்கும் இன்றைய கொடும் நெஞ்சத்தினர்க்கு அறிவுரை கூறுவதாக இப்பாடல் அமைகிறது.நெட்டிமையார் என்ற புலவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி என்ற மன்னரைப் புகழ்ந்து பாடுவதாக அமைந்தது கீழ்வரும் பாடல்.

' ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என,
அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும்
எம் கோ, வாழிய, குடுமி தம் கோச்
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே!

ஆக்களையும்(பசுக்களையும்), ஆவினது இயல்புடைய பார்ப்பனர்களையும், மகளிரையும்,நோயுற்றவரையும் பாதுகாக்கும் நோக்கிலும்,தென்திசைக்கண் வாழும் இறந்தவர்களான முன்னோர்களுக்கு இறுதிக்கடமைகள் செய்யும் புதல்வர்களைப் பெறாதவர்களைக் காக்கும் நோக்கிலும் எங்கள் அரசன் போர் செய்ய வருகின்றான்.அவன் அம்பு பாயாத வண்ணம் அனைவரும் பாதுகாபான இடங்களுக்குச் செல்வீர்களாக! என்று அறப்பண்புடன் நடந்துகொள்ளும் அரசன் படைகளை உடையவன்.

மறப்பண்பு (வீரம்) நிறைந்தவன்.யானைமேல் கொடிகள் அசையும் வகையில் யானை மேல் ஏறிச்செல்லும் இயல்புடையவன்.அவன் பெயர் குடுமி என்பதாகும் அவன் பஃறுளியாற்றின் மணலின் எண்ணிக்கையவிட அதிகமான ஆண்டுகள் வாழட்டும் என்று புலவர் வாழ்த்தினார்.

இவ்வாறு போரிடும் ஆற்றல் இல்லாத எளிய மக்களைப், பாதுகாத்த பண்டையநாள் அரசர்களை நினைக்கும்பொழுது அவர்களின் கருணையுள்ளம் நமக்குப் புலப்படுகிறது. அறிவியல் தொழில் நுட்பங்களால் நாம் முன்னேறியுள்ளதாகக் கூறிக்கொண்டாலும் "வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரியும்" நிலை மாறவில்லை.

(மேலும் விவரமாக அறிய விழைபவர்களுக்கு ஔவை.துரைசாமியாரின் சிறு விளக்கத்தையும் அளிக்கிறேன்.கழகப்பதிப்பு)


(இனி, இப் பாட்டின்கண் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி,
அறத்தாறு நுவலும் பூட்கையும் யானைமேற் கொடி காட்டிய
சிவிகையமைத்து இவர்ந்து வரும் பெருமிதமும் உடையன் என்றும்,
இவனுடைய முன்னோனாகிய பாண்டியன் நெடியோனென்பான்
பஃறுளியாறு கடலிற் கலக்குமிடத்தே முந்நீர் விழா ஆற்றினான்
என்றும், அவ்வியாற்று மணலினும் பல வாண்டுகள் இப் பாண்டியன்
முதுகுடுமி வாழ்வானாக என்றும் வாழ்த்துகின்றார்.)

(ஆவும் ஆன் இயற் பார்ப்பன மாக்களும் - ஆவும்
ஆனினதியல்பையுடைய பார்ப்பாரும்; பெண்டிரும் - மகளிரும்;
பிணியுடையீரும் - நோயுடையீரும்; பேணி - பாதுகாத்து; தென்புல
வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும் - தென்றிசைக்கண் வாழ்வோராகிய
நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய பிண்டோதகக்
கிரியையைப் பண்ணும்; பொன்போல் புதல்வர்ப் பெறாதீரும் -
பொன்போலும் பிள்ளைகளைப் பெறாதீரும்;எம் அம்பு கடி விடுதும்-
எம்முடைய அம்பை விரையச் செலுத்தக் கடவேம்; நும் அரண்
சேர்மின் என - நீர் நுமக்கு அரணாகிய இடத்தை அடையும் என்று;
அறத்தாறு நுவலும் பூட்கை - அறநெறியைச் சொல்லும்
மேற்கோளினையும்; மறத்தின் - அதற்கேற்ற மறத்தினையுமுடைய;
கொல் களிற்று மீமிசைக் கொடி - கொல் யானை மேலே
எடுக்கப்பட்ட கொடிகள்; விசும்பு நிழற்றும் - ஆகாயத்தை
நிழற்செய்யும்; எங்கோ குடுமி வாழிய - எம்முடைய வேந்தனாகிய
குடுமி வாழ்வானாக; தம் கோ - தம்முடைய கோவாகிய; செந்நீர்ப்
பசும்பொன் -சிவந்த நீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னை;
வயிரியர்க்கு ஈத்த - கூத்தர்க்கு வழங்கிய; முந்நீர் விழவின்
நெடியோன் -முந்நீர்க் கடற்றெய்வத்திற்கெடுத்த விழாவினையுடைய
நெடியோனால் உளதாக்கப்பட்ட; நன்னீர்ப் பஃறுளி மணலினும் பல -
நல்ல நீரையுடைய பஃறுளி யென்னும் ஆற்றின் மணலினும் பலகாலம்
எ-று. )
நன்றி: முனைவர் மு.இளங்கோவன்
SocialTwist Tell-a-Friend

No comments: