பொய்ச் செய்தி மீதான விவாதங்களைத் தவிர்த்து விட்டு இலட்சியத்தை முன்னெடுப்பதற்காகத் துணைநிற்கும் முயற்சிகளிலும் நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட வேண்டும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் வெளியிட்டிருக்கும் அறிக்கைக்கு பதிலளிக்கும் முகமாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு
:விடுதலைப் புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19-05-2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார்.
இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சிறிதளவு கூட நம்பகத்தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன்.தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள அரசும், இந்தியாவில் உள்ள சில ஊடகங்களும் பரப்பிய செய்திகளைப் போல இச்செய்தியும் நம்பகத் தன்மையற்றது.
ஆழமான உள்நோக்கத்துடன் திட்டமிட்டு இச்செய்தி பரப்பப்படுகின்றது என்பதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும்.பிரபாகரனின் சக தளபதிகளைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் உரிமை இல்லை. வேறு யார் என்ன அறிவித்தாலும் அதை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.இலங்கையில் சிங்கள இராணுவத்தின் கொடூரமானத் தாக்குதலின் விளைவாக 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களும்,போராளிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல், உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் மருத்துவ வசதியின்றி உயிருக்காக போராடி வருகின்றனர்.மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு, மருந்து, குடிநீர்வசதி இல்லாமல் சாவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுத் துடிக்கின்றனர். பாதுகாக்கப்பட்ட வலயங்கள் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சித்ரவதைச் செய்யப்படுகின்றனர். போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒருபுறம் ஏமாற்றிக்கொண்டு மறுபறம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதலைச் சிங்கள இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.இக்கொடுமைகளையெல்லாம் மறைப்பதற்காகவும், திசைதிருப்புவதற்காகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பொய்யானச் செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. பிரபாகரன் எந்த இலட்சியத்திற்காகப் போராடி வருகிறாரோ அது இன்னமும் எட்டப்படவில்லை. தமிழீழ மக்களின் துயரம் தொடர்கிறது. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளும் தளபதிகளும் பிரபாகரனின் வழிகாட்டலுடன் அந்த இலட்சியத்தை நிறைவேற்றும் உறுதியுடன் களத்தில் போராடி வருகிறார்கள். சொல்லொணாத் துன்பங்களுக்கு நடுவிலும் சிறிதளவும் மனந்தளராமல் தமிழீழ மக்களுடன் உறுதியோடு போராளிகளுடன் ஒன்றிணைந்து நிற்கின்றனர்.எனவே இந்தப் பொய்ச் செய்தி மீதான விவாதங்களைத் தவிர்த்து விட்டு இலட்சியத்தை முன்னெடுப்பதற்காகத் துணைநிற்கும் முயற்சிகளிலும் நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட வேண்டும். இதுதான் அவரை நாம் மதிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் உரிய அடையாளம் ஆகும்.

நன்றி தமிழ்செய்தி
1 comment:
தலைவர் இருக்கிறாரா இல்லையா என்ற ஆராட்சி செய்யும் நேரமல்ல, தலைவர் வரவேண்டிய நேரத்தில் வருவார்.
Post a Comment