மக்களவையில் இன்று காலை கேள்வி நேரத்தின்போது, தமிழகத்தைச் சேர்ந்த - திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட - உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன், ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு ஏற்பட்டுள்ள தடையை நீக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் விலங்களுகள் நல அமைப்பு தொடர்ந்துள்ள வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசிற்குக் கோரிக்கை விடுத்தார்.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு, அது அவர்களின் பண்பாட்டோடு ஒன்றியது என்றும், ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளையை அடக்கும் போட்டியையும் உறுப்பினர் சித்தன் சுட்டிக்காட்டினார்.
அவருக்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், “ஏதோ ஒரு காலத்தில் தொடங்கி கடைபிடிக்கப்பட்டுவரும் இப்படிப்பட்ட விளையாட்டுகளை இந்த நவீன காலத்தில் அனுமதிக்க முடியாது. விலங்குகளுக்கு தீங்கு இழைக்கும் இப்படிப்பட்ட விளையாட்டில் ஈடுபட்ட பலர் உயிரிழந்துள்ளனர். எனவே இப்படிப்பட்ட ஒரு விளையாட்டிற்கு தமிழக அரசே முன்வந்து தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
அமைச்சர் ரமேஷின் பதிலிற்கு மேல் எந்த துணைக் கேள்வியும் காங்கிரஸ் உறுப்பினர் சித்தன் கேட்கவில்லை. எனவே அடுத்த கேள்வியைக் கேட்குமாறு விலங்குகளின் நலன் காப்பதையே தனது அரசியலாக கொண்டுள்ள மேனகா (காந்தி)யை மக்களவைத் தலைவர் அழைத்தார்.
குல தெய்வங்களுக்கு விலங்குகளை உயிர்ப் பலி கொடுப்பதை தடை செய்ய வேண்டும் என்று மேனகா கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், அப்படிப்பட்ட ஒரு வழக்கம் இந்தியா முழுவதும் பரவியுள்ளது என்றும், அது மக்களின் மத உணர்வோடு (செண்டிமெண்ட்) தொடர்புடைய ஒரு வழக்கமாகும் என்றும், எனவே அதற்குத் தடை விதிக்க முடியாது என்றும் பதிலளித்தார்.
ஜல்லிக்கட்டு துன்புறுத்தலா?
ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஈடுபடுத்தப்படும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்று கூறும் பலரும் அவைகள் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சாற்றுகின்றனர். ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படும் காளைகள், அதற்கென்றே வளர்க்கப்பட்டு, கொம்பு சீவி விடப்பட்டு களமிறக்கப்படுகின்றன என்பதையும், அப்படி களமிறக்கப்படும் காளைகள் ஒவ்வொன்றும் அதனை மடக்க வரும் வீரமிக்க காளையர்களை விட 10 மடங்கு எடையும், ஒரே நேரத்தில் பல பேரைத் தூக்கி எறியும் பலமும் கொண்டவை என்பதையும் அறியாதவர்களாகவே இருக்கின்றனர்.
களமிறக்கப்படும் மாடுகளுக்கு போதைப் பொருள் ஏதும் கொடுக்கக் கூடாது என்று கட்டுப்பாடு உள்ளது. கால்சட்டையும், மேல் ஆடையும் மட்டுமே அணிந்து கொண்டு, எந்த ஆயுதமும் இன்றி, வீரத்தையும், மாடு பிடிக்கும் நு்ட்பத்தையும் மட்டுமே நம்பி களமிறங்கும் காளையர்கள் அந்த மாடுகளை எதிர்கொள்கின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு வீரமிக்க விளையாட்டு ‘கொல்லேறு தழுவல்’ என்று தமிழரின் இலக்கியத்தில் போற்றப்பட்டு, இன்றுவரை தமிழர் பண்பாடு தழுவிய வீர விளையாட்டாக இருந்து வருகிறது.
ஆனால் இந்த விளையாட்டு அந்தக் காளைகளை துன்புறுத்துகிறது என்று வரையரை மீறிய ‘காருண்ய’த்துடன் இந்த விலங்கின ஆர்வலர்கள் குரல் கொடுப்பதும், அதனை வீரம் என்றால் கிலோ எத்தனை ரூபாய் என்று கேட்கும் தமிழரின் பண்பாட்டிற்கு அப்பாற்பட்ட பத்திரிக்கைகள் கண்டித்து எழுதுவதையும், அதே அடிப்படையாக வைத்து வழக்கு தொடர்வதும், அதனை விசாரிக்கும் இந்தியாவின் உச்ச நீதிமன்றம், இவர்களையும் மீறிய காருண்யத்துடன் ஜல்லிக்கட்டிற்குத் தடை விதிப்பதும் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
thanks to http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1008/11/1100811072_1.htm
No comments:
Post a Comment