சென்னை: தொல் பொருள் ஆய்வு துறை உருவாக்கப்படுவதற்கு முன் நாட்டின் பண்பாட்டு அடையாளங்களை கண்ணை இமை காப்பது போன்று ரத்தம் சிந்தியும், உயிர்தியாகம் செய்தும் பாதுகாத்து வந்தவர்களை விரட்டியடிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொல் பொருள் ஆய்வு சட்டத்துக்கு
மதிமுக பொது செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்தள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மிகப் பழமையான நகரமாக ஐ.நா. பொது மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு நகரங்கள் மாமல்லபுரமும், தஞ்சையும் ஆகும்.
பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்க தொல் பொருள் ஆய்வு துறை உருவாக்கப்பட்டு, தனிச்சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் இந்த அமைப்பு உருவாவதற்கு முன்பு, நமது பண்பாட்டுப் பெட்டகங்களை, கண்ணை இமை காப்பது போன்று ரத்தம் சிந்தியும், உயிர்தியாகம் செய்தும் அப்பகுதியில் வாழ்ந்தவர்கள்தான் பாதுகாத்து வந்துள்ளனர்.
அப்படி பாதுகாத்த மக்களை அவர்களது வாழ்விடங்களில் இருந்து அகற்றி உள்நாட்டு அகதிகளாக மாற்றுகின்ற வகையில், மத்தியில் ஆளும் கூட்டணி அரசு புதிதாக ஒரு தொல் பொருள் ஆய்வு சட்டத்தை (2010) கொண்டு வந்துள்ளது.
2010ம் ஆண்டு சட்டத்தின் மூலம், சொந்த மண்ணை சொர்க்கமாகக் கருதி வாழ்ந்த மக்களை அவர்களுடைய வசிப்பிடங்களில் இருந்து விரட்டி அடித்து, நாடோடிகளாக ஆக்கிவிட்டு, அவ்விடத்தில் எருக்கன் செடி, கள்ளிச்செடி, அலரிச் செடியை விளைய வைத்து, வெளவால், ஆந்தை, நரி, பாம்பு, உலவிடும் அரவங்காடாக மாற்றி செயற்கை நகரமாக உருவாக்க முயற்சிப்பதாக உள்ளது.
புதிய சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னத்தில் இருந்து 1000 அடி வரை எந்த கட்டுமானமும் கட்ட அனுமதி இல்லை. மீறுவோருக்கு ஒரு லட்சம் அபராதத் தொகையுடன் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை.
குடும்பத்தினர் எண்ணிக்கை பெருகி இட நெருக்கடி ஏற்படும் நிலையில் தங்களின் மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டை விரிவாக்கம் செய்யவோ, கூடுதல் அறையோ, தாழ்வாரமோ, கழிப்பு அறையோ கட்டினால் கூட இச்சட்டத்தின்படி வீட்டின் உரிமையாளரும் அப்பகுதியில் பணியாற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் தண்டிக்கப்படுவார்கள்.
ஏற்கனவே வாழ்ந்து வரும் வீடுகள் தொல் பொருள் ஆய்வுத் துறையின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டு இருப்பின், அவற்றை இடிப்பதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இப்பகுதிகளில் புதிதாக மின் இணைப்புகள் இனி வழங்கப்பட மாட்டாது.
விருந்தினர் போற்றும் திட்டத்தை அறிவித்துள்ளனர். ஆனால் வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் வசதிகளுக்காக புதிய தங்கும் விடுதிகள். உணவு வளாகங்கள், பொழுது போக்கு விளையாட்டு இடங்கள் கட்ட முடியாது.
நீதிமன்றத்தின் மூலமாக நிவாரணம் தேட முடியாமல், மேல் முறையீடு மறுக்கப்படுகிறது. சர்வாதிகார நாடுகளில்தான் இத்தகைய சட்டங்கள் இயற்றப்படுகின்றன.
எனவே தொல் பொருள் ஆய்வுத்துறை கொண்டு வந்துள்ள சட்டத்தை முழு பலத்துடன் எதிர்த்து மக்கள் போராட வேண்டும். மக்களுக்குப் பயன்தராத இச்சட்டத்தை, ஆளும் காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
thanks to http://thatstamil.oneindia.in/news/2010/08/23/vaiko-opposes-new-archeological-protection.html
மத்திய அரசின் புதிய தொல் பொருள் சட்டம்: வைகோ கடும் எதிர்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment