அதிமுக கொடுத்த ஒரு சீட்டுக்கு அதிருப்தி-பார்வர்ட் பிளாக்கில் போர்க்கொடி

சென்னை: அதிமுக கூட்டணியில் தங்களது கட்சிக்கு ஒரு சீட் மட்டுமே ஒதுக்கியதற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் அதிருப்தி வெடித்துள்ளது. தங்களது கட்சி தனித்துப் போட்டியிடும் என கட்சியின் ஒரு பிரிவு அறிவித்துள்ளதால் கட்சி பிளவுபடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இக்கட்சிக்கு ஜெயலலிதா ஒரு சீட் ஒதுக்கியுள்ளார். இதுதொடர்பான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

அதில் பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசியச் செயலாளரும் மேற்குவங்க மாநில விவசாயத்து துறை அமைச்சருமானர் நரேந்திரநாத் தே, ஜெயலலிதா ஆகியோர் நேற்று கையெழுத்திட்டனர். அப்போது கட்சியின் தேசியச் செயலாளர் தேவராஜன், மாநில பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தேவராஜன் கூறுகையில், தமிழ்நாட்டில் இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு அணியை வலுப்படுத்தும் வகையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான அணியில் சேர்ந்து போட்டியிடுவது என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினோம்.

இந்தத் தேர்தலில் அதிமுக அணியில் எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிங்கம் சின்னத்தில் எங்கள் கட்சி வேட்பாளர் போட்டியிடுவார் என்றார் தேவராஜன்.

உசிலம்பட்டி தொகுதியில்...

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில்தான் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தொடர்ச்சியாக போட்டியிட்டு வருகிறது. எனவே, இந்தத் தேர்தலிலும் தங்கள் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் பார்வர்டு பிளாக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு சீட் மட்டும் தரப்பட்டதற்கு அந்தக் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு சீட்டுக்காக ஒப்பந்தம் போடுவதா என்று கட்சியின் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் மாயாண்டி ஆகியோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

ஒரு சீட் தருவதை தங்களால் ஏற்க முடியாது என்றும், தங்களது கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் பார்வர்ட் பிளாக் கட்சி பிளவு படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இக்கட்சியின் தலைவராக நடிகர் கார்த்திக் பதவி வகித்துள்ளார். ஆனால் அவரும் பின்னர் அதிருப்திக்குள்ளாகி, கட்சியை விட்டு நீக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். அதன் பிறகுதான் அவர் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை ஆரம்பித்தார். தற்போது கார்த்திக்கும், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
thanks to http://thatstamil.oneindia.in/news/2011/02/24/upset-over-seat-allocation-aifb-on-verge-of-split-aid0090.html
அதிமுக கொடுத்த ஒரு சீட்டுக்கு அதிருப்தி-பார்வர்ட் பிளாக்கில் போர்க்கொடிSocialTwist Tell-a-Friend

No comments: