தேவர் குருபூஜை: தலையில் ரிப்பன் கட்டி வர வேண்டாம்

First Published : 22 Oct 2010 11:34:15 AM IST


ராமநாதபுரம், அக். 21: தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் தலையிலோ அல்லது கைகளிலோ எவ்வித கலர் துணிகள், ரிப்பன்கள் கட்டி வர வேண்டாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வியாழக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளார். தேவர் குருபூஜை விழா தொடர்பான அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமை வகித்து மேலும் பேசியதாவது: அஞ்சலி செலுத்த வாகனங்களில் வருவோர் வாகன எண், அதன் ஓட்டுநர் முகவரி, வாகன உரிமையாளர் முகவரி மற்றும் வாகனத்தில் பயணம் செய்வோரின் விவரத்தை வாகனம் புறப்படும் இடத்தின் எல்கைக்குட்பட்ட காவல் நிலையத்தில் முன்கூட்டியே தெரிவித்து, அதற்கான காவல் துறையினரின் அனுமதி சான்றை வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டி வர வேண்டும். சான்று பெறாத வாகனங்களுக்கும் லாரி,டிராக்டர் போன்ற வாகனங்களில் வரவும் அனுமதியில்லை. வாகனங்களின் மேற்கூரையில் வருவதோ, கோஷம் எழுப்புவதோ, ஆயுதங்கள் மற்றும் மதுபானங்கள் எடுத்து வரவோ அனுமதியில்லை. காவல் துறையினர் சோதனை செய்யும் போது ஆயுதங்களோ அல்லது மதுபானங்களோ இருந்தால், அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும். வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், வாகனத்தில் பயணிப்போர் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும். ஜோதி எடுத்து வருபவர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் செல்ல வேண்டும். ஜோதி, முளைப்பாரி, பால்குடம் போன்ற ஊர்வலங்களுக்கு இம் மாதம் 29 ஆம் தேதி அனுமதிக்கப்படும். மறுநாள் 30 ஆம் தேதி இதுபோன்ற ஊர்வலங்களுக்கு அனுமதியில்லை. பசும்பொன்னில் ஊர்வலங்கள் நடத்த அனுமதி கிடையாது. வெளிமாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு வழிக் காவல் பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், காவல் துறை தொலைபேசி எண்-04567-232110, 232111 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்தார். கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கி. பாலசுப்பிரமணியம், எஸ்.பி.பிரதீப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகவேல், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், சமுதாயத் தலைவர்கள் உள்பட வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
 
thanks to /http://www.dinamani.com/
தேவர் குருபூஜை: தலையில் ரிப்பன் கட்டி வர வேண்டாம்SocialTwist Tell-a-Friend

No comments: