மைசூர் அரசர்கள்!

ஒரு மாலை நேரச் சொற்பொழிவுக்காக பெங்களூரிலிருந்து வந்திருந்தார் இளைஞர் விக்ரம் சம்பத். வயது 30. பிலானி இஞ்சினீயரிங் இன்ஸ்டிட்யூட்டில் மின் இயல்- மின்னணு இயல் துறையில் பயிற்சி பெற்று, மும்பையில் எம்.பி.ஏ., நிதி நிர்வாக ஆராய்ச்சித் துறையில் தேறி, கணிதத் துறையிலும் மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றவர். தற்போது ஒரு கணினி நிறுவனத்தில் உயர் பதவி வகித்து வருகிறார்.

இத்தனை துறைகளிலும் தேறியிருந்தாலும் அவருடைய ஆர்வம் எல்லாம் சரித்திரம், கலாசாரம், இசை, கவிதை, இதழியல் என்று பரந்து விரிந்திருக்கிறது.

அவர் எழுதிய மைசூர் அரச வம்சத்தைச் சேர்ந்த ஒடையார்கள் பற்றிய ஆங்கில நூலை சென்ற ஆண்டு கர்நாடக ஆளுநர் பெங்களூரில் வெளியிட்ட பிறகு, தொடர்ந்து லண்டன், சிகாகோ, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகம், கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை என்று பல இடங்களில் அந்தப் புத்தக வெளியீட்டு விழாக்கள் நடந்தன. மேற்கு வங்க ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, எல்.கே. அத்வானி, கன்னட நாவலாசிரியர் யு.ஆர்.அனந்தமூர்த்தி, வைஜயந்திமாலா பாலி, ராமச்சந்திர குஹா, சுதா மூர்த்தி என்று பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த நூலை வியந்து ரசித்து விக்ரம் சம்பத்தைப் பாராட்டியிருக்கிறார்கள். 2008ஆம் ஆண்டில் வெளியான நாவல்-அல்லாத படைப்புகளில் அதிக விற்பனை என்ற சாதனையைச் செய்த நூல்களில் இதுவும் ஒன்று.

ஒரு காலத்தில் மைசூரும் அதையடுத்த பகுதிகளும் மஹிஷாசுரன் என்ற அரக்கன் ஆட்சியின் கீழ் இருந்ததாம். அவனோடு பத்து நாட்கள் போர் புரிந்து துர்க்கா சாமுண்டீசுவரி அவனைக் கொன்றாளாம். மஹிஷூரு என்பதுதான் மருவி மைசூர் என்று ஆயிற்றாம்.

இந்தப் பகுதிக்கு 1399-ல் இரண்டு இளைஞர்கள் யாதுராயா, கிருஷ்ணராயா குஜராத்தில் உள்ள துவாரகையில் இருந்து குதிரையில் பயணம் செய்து வந்து சேர்ந்தார்களாம். தாங்கள்

பகவான் கிருஷ்ணரின் யதுகுலத் தோன்றல்கள் என்று கூறினார்களாம்.

"ஒடையா' என்றால் கன்னட மொழியில் எசமான் என்று அர்த்தம். அதாவது 33 கிராமங்களுக்கு அதிபதியாக இருக்க வேண்டும். அப்போதிருந்த அரசியல் குழப்பத்தினிடையே அங்கு ஆண்டுக்கொண்டிருந்த சாமராஜா மரணமடைந்தார். அவர் மகள் சிக்கதேவரசியைக் கடத்திக் கொண்டு போவதோடு, ஆட்சியையும் பிடிக்கப் போவதாக மாறநாயக்கன் என்பவன் அச்சுறுத்தினான். யதுராயனும் கிருஷ்ணராயனும் அவனை எதிர்த்துப் போராடி அவனைக் கொன்றனர். சாமராஜாவின் மனைவி, தன் மகள் சிக்கதேவரசியை யதுராயனுக்கு மணம் செய்து கொடுத்தான். இந்த 1399லிருந்து ஒடையார் ராஜ பரம்பரை தொடங்குகிறது.

சாமராஜ ஒடையார், திம்மராஜ ஒடையார், இரண்டாவது சாமராஜ ஒடையார் என்று தொடங்கி ராஜ ஒடையார், நரசராஜ ஒடையார், சிக்கதேவராஜ ஒடையார் என்று தொடர்ந்து பிறகு ஹைதர் அலி-திப்பு சுல்தான் இடைப்பட்டு, மறுபடியும் மும்மடி கிருஷ்ணராஜ ஒடையார் (இவரை மகாத்மா காந்தி "ராஜரிஷி' என்று குறிப்பிட்டிருக்கிறார்) ஜெயசாமராஜ ஒடையார் என்று மைசூர் ஒடையார் ராஜ வம்ச பரம்பரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.

ஒடையார்களின் ஆட்சியின்போது கலையும் கலாசாரமும் முக்கிய இடம் பெற்றனவாம். மும்மடி கிருஷ்ணராஜ ஒடையார் ஏராளமான ஜாவளிகள் இயற்றியிருக்கிறார். அவை யாவும் தியாகம் அல்லது விட்டுவிடுதல் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டவை. அவருடைய பக்திப் பாடல்கள் "அனுபவ பஞ்சரத்னம்' என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கின்றனவாம். கிருஷ்ணராஜ ஒடையார் ஓவியம் வரைவதிலும் சிறந்தவராம். ஸ்ரீதத்வநிதி, ஸ்வர சூடாமணி என்ற தமது இரண்டு தொகுப்புகளுக்கு அவரே ஓவியம் வரைந்தாராம். தென்னிந்திய இசைத் தொடர்பு ஓவியத்தில், சுவரங்களுக்கும் ராகங்களுக்கும் தாளங்களுக்கும் மனித வடிவத்தில் ஓவியங்கள் வரைந்து அவற்றைப் போற்றியதில் இவையே முதல் என்கிறார்கள்.

இசை என்று எடுத்துக் கொண்டால், மூன்றாம் கிருஷ்ணராஜ ஒடையார் காலத்தில்தான் வீணை அனந்த சுப்பையா, வீணை சாம்பய்யா, வீணை தொட்ட சுப்பராயா, தியாகராஜரின் சீடர் லால்குடி ராமய்யர், சியாமா சாஸ்திரிகளின் சீடர் அப்புக்குட்டன் நட்டுவனார், மைசூர் சதாசிவராவ் போன்றோர் ஆஸ்தான வித்துவான்களாக இருந்தனர்.

"ராஜரிஷி' நால்வாடி கிருஷ்ணராஜ ஒடையாரின் அரண்மனையில் மைசூர் வாசுதேவாச்சார், பிடாரம் கிருஷ்ணப்பா, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் போன்றோர் வித்துவான்களாக இருந்தனர்.

தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் ஓவியம் போலவே மைசூர் வீணையும் மைசூர் ஓவியமும் தனிச் சிறப்பு வாய்ந்தவை.

இவர்கள் காலத்தில் இருந்த திவான்கள் கர்நாடகப் பகுதியை எல்லா வகைகளிலும் மிகுந்த முன்னேற்றமடைந்த நகரமாக அமைத்தார்கள். ரயில் போக்குவரத்து, மின்சாரம்.. எனப் பல விஷயங்களிலும் வளர்ச்சி அடைந்தார்கள். 1881லேயே ஜனநாயகத்துக்கு முன்னோடியாக பிரஜா பிரதிநி சபா ஏற்படுத்தினார்கள் என்பன புதிய செய்திகளாய் இருந்தன.

கர்நாடக இசையில் மிகுந்த ஆர்வமுள்ள விக்ரம் சம்பத் பாம்பே ஜெயஸ்ரீ, ஜெயந்தி குமரேஷ் ஆகியோரிடம் இசை பயின்று வருகிறார்.




பகவத் கீதை குறித்த ஆங்கிலச் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதில் சுவாமி சின்மயானந்தா முதல் பலரும் தத்தம் முத்திரையைப் பதித்து வருகிறார்கள். தமிழில் சொல்லும்போது வரும் கூட்டத்தைப் போலவே ஆங்கிலச் சொற்பொழிவுகளுக்கும் நிறையப் பேர் வருகிறார்கள். ஊன்றிக் கவனித்தால், ஆங்கில உரையைக் கேட்க நிறைய இளைஞர்கள் வருகிறார்கள் என்று தெரிகிறது.

உலகின் பல பகுதிகளுக்கும் சென்று சொற்பொழிவாற்றி வரும் சுவாமி பூமானந்த தீர்த்தர் நிகழ்த்திய மூன்று நாள் நிகழ்ச்சியின் முதல் நாள் உரையைக் கேட்டபோது,

அவருடைய எளிமையான, ஆனால் ஆவேசமான விறுவிறுப்பான ஆங்கிலமே அவருக்கு ரசிகர்களை உருவாக்கியிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பகவத் கீதையில் நிர்வாகம், போர், மனித சுபாவம் இவைதான் பேசப்படுகின்றனவே தவிர மதம் பற்றிய பேச்சு இல்லை என்றார் சுவாமிஜி. (அப்படியா!)




ஊத்துக்காடு வேங்கட கவி இசை விழா, ஆலாபனா அறக்கட்டளை இசை நடன விழா, டாக்டர் எஸ்.ராமநாதன் நினைவு "சிவன் மூவர்' நடன நிகழ்ச்சி, பாலகர்னாம்ருதம் இசை நிகழ்ச்சிகள் என்று அக்கம்பக்கம் முழுக்க ஏராளமான நிகழ்ச்சிகள்! சீஸன் சாதாரணமாக நவம்பரில்தான் சூடு பிடிக்கும். செப்டம்பரிலேயே இத்தனை விழாக்கள் தொடங்கிவிட்டதால், அக்டோபரிலும் சில சின்ன சபாக்கள் தொடர் இசை நிகழ்ச்சிகளை அறிவித்துவிட்டார்கள்!

ஓ.எஸ்.அருண் நடத்திய "ஆலாபனா' இசை விழாவில் வந்து பாடிய இளைஞர் துஷார், படு உஷார் பார்ட்டி ஒரு மணி நேரத்திலேயே அத்தனை ரசிகர்களையும் தம் குரலாலும் இசையாலும் வளைத்துப் போட்டதோடு, பாடி முடித்ததும் எல்லோருக்கும் நன்றி சொன்னார். இந்தக் கேரள இளைஞரை டிசம்பர் சீஸனில் எந்த சபாவாவது அழைத்து குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது கொடுக்க வேண்டும் என்பதுதான் ஒருமித்த கருத்து! நீலகண்ட சிவன், ராமசாமி சிவன், பாபநாசம் சிவன் பாடல்களை மட்டுமே வைத்து, தன் நடன நிகழ்ச்சியை வழங்கினார் நர்த்தகி நடராஜ். ஜதிகளாகட்டும், சஞ்சாரிகளாகட்டும், அபிநயமாகட்டும் எதையும் மிகை இல்லாமல் செய்தார் நர்த்தகி.


Thanks
http://dinamani.com/
மைசூர் அரசர்கள்!SocialTwist Tell-a-Friend

No comments: