அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை சுமார் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை என கருதப்படுகிறது.இதை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த புவியியல் விரிவுரையாளர் எம்.மு.ராம்குமார் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.அந்த குழுவில் பேராசிரியர் கு.அன்பரசு, விரிவுரையாளர் இரா.சுரேஷ் மற்றும் ஆய்வு மாணவர்கள் சுகந்தா, சதீஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இந்த குழுவினர் கடந்த 2006ம் ஆண்டில் இருந்து அரியலூருக்கு வடகிழக்கே ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் டைனோசர் முட்டைகளை சென்னை, திருச்சி நெடுஞ்சாலையில் அரியலூர் அருகே காவிரி நதியின் வடக்கு பகுதியில் உள்ள செந்துறை என்ற கிராமத்தில் கண்டுபிடித்துள்ளனர். இந்த முட்டைகள் மாமிச கார்னோசர் மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ சௌரபோட் டைனோசரின் முட்டைகள் என தெரியவந்துள்ளது. இதில் சைவமான சௌரபோட்ஸ் நீண்ட கழுத்தை கொண்டு, அதிக உயரமாக வளர கூடியவை.இங்கு கிடைத்த படிவங்களின் மூலம் இப்பகுதியில் ஒரு காலத்தில் டைசோனர்கள் பெருமளவில் இருந்திருக்கலாம் என தெரிகிறது. மேலும், இந்த முட்டைகள், சுமார் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை எனவும் தெரிகிறது.இதே பகுதியில் 1843ம் ஆண்டு ஒரு பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் 32 பெட்டிகள் நிறைய வித்தியாசமான கற்களை அகழ்ந்தெடுத்தார். அதுவும் டைனோசர் முட்டையின் படிவங்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.இது குறித்து பெரியார் பல்கலைக்கழக புவியியல் பிரிவு விரிவுரையாளர் ராம்குமார் கூறுகையில்,டைனோசரின் கோள வடிவமான முட்டைகளை குவியல் குவியலாக கண்டெடுத்துள்ளோம். எலும்புத் துண்டுகள், அவை வாழ்ந்த காலத்தில் இருந்த நன்னீர் ஏரி, ஆற்றுப் பாதை ஆகியவற்றின் தடயங்களும் கிடைத்துள்ளன.ஒவ்வொரு குவியலிலும் குறைந்தது 9 முட்டைகள் வரை இருந்தன. முட்டைகள் சுமார் 13 முதல் 20 செமீ விட்டம் கொண்டதாக இருந்ததது. அந்த குவியல்கள் சுமார் 1.25 மீ நீளம் இருந்தது.மண்ணுக்குள் ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்படுவது இந்தியாவில் இது தான் முதல் முறை.நானும் எனது மாணவர்களும் கடந்த மாதம் 12ம் தேதி ஒரு சுனை வழியாக சென்று கொண்டிருந்த போது கோள வடிமான ஒன்று மண்ணில் இருந்து வித்தியாசமாக தெரிந்தது. அதை பார்த்ததும் நாங்கள் ஆச்சர்யமடைந்தோம்.நான் டைனோசர் முட்டைகளை அதற்கு முன்னதாக பார்த்திருந்ததால் அது டைனோசர் முட்டை தான் என்பதை உறுதி செய்தேன்.இதையடுத்து அப்பகுதியில் 2 சதுர கிமீ அளவுக்கு தோண்டி, ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். அப்போது ஏழு படுக்கைகளுக்கு அடியில் முட்டை குவியல்களை கண்டோம். தக்கான பீடபூமி பகுதியில் அந்த காலத்தில் இருந்த எரிமலைகள் வெடித்து சிதறியதால் தான் இவை அழிந்தன என சந்தேகப்படுகிறோம். ஏனென்றால் முட்டைகளுக்கு இடையே எரிமலை சாம்பல்கள் இருந்தன. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு என்றார்.இதையடுத்து அரியலூர் மாவட்டம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி வரைபடத்தில் முக்கிய இடத்தை பிடிக்க இருக்கிறது. தற்போது இங்கு எடுக்கப்பட்ட முட்டைகளின் மாதிரிகள் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டு மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட உள்ளது.
அரியலூரில் நூற்றுக்கணக்கில் டைனோசர் முட்டை கண்டுபிடிப்பு!
Posted by
maac
Labels:
ariyalur,
cauvery basin,
dinosaur,
egg,
jurassic nest,
periyar university team,
அரியலூர்,
காவிரி பகுதி,
டைனோசர் முட்டை
-
1.10.09
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment