நாட்டுப் பசுக்களை வழங்க வேண்டும்-ஜெ.வுக்கு ராம கோபாலன் கோரிக்கை

சென்னை: இலவச ஆடு-மாடுகள் வழங்கும் திட்டத்தில், ஏழை மக்களுக்கு தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுவை முதல்வர் ஜெயலலிதா வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் ஏழை மக்களுக்கு 60,000 கறவை மாடுகள் வழங்கிட உத்தரவிட்டுள்ளதை இந்து முன்னணி வரவேற்கிறது. பாராட்டுகிறது. அரசு வழங்கும் கறவை மாடுகளான பசுக்கள் நாட்டுப் பசுக்களாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

நமது நாட்டுப் பசுக்களின் பால் தரமுடையதாகவும், அதன் கோமூத்திரம், சாணம் இயற்கை விவசாயத்திற்குப் பெரிதும் உதவிகரமாகவும் இருக்கிறது. எனவே தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுவைத் தமிழக அரசு அளிக்கவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.

தமிழக அரசு, இத்திட்டம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பயனாளிகளைக் கிராமப் பஞ்சாயத்து மூலம் தேர்ந்தெடுக்க இருப்பது நல்ல முன்மாதிரியாகும். இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திட அதிகாரிகள், பொதுமக்கள் கொண்ட கண்காணிப்புக் குழுவை நியமிக்க வேண்டும்.

பசுவை வைத்துப் பராமரிக்க உத்தரவாதம் வாங்க வேண்டும். இல்லையேல் கசாப்பிற்கு விற்போரும், இடைத்தரகர்களும் இதன் பலனைக் கொள்ளையடித்து அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவர்.

பசு மேய்வதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் மேய்ச்சல் புறம்போக்கு நிலம் காலகாலமாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை அரசியல்வாதி கள், செல்வாக்குமிக்கோர் சட்ட விரோதமாக ஆக்கிரமித்திருந்தால் அதனை மீட்டு பசு மேய்வதற்குப் புல், தீவனம் வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கிராமத்து நீர் நிலைகளைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண் டும். பசுஞ்சாணத்தால் தயாரிக்கப்படும் “கோபர் கேஸ்” திட்டத்தை ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் கிராம மக்களின் எரிபொருள் தேவை பூர்த்தியாவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு, இயற்கை உரம் தரமாகக் கிடைக்க வழி கிடைக்கும்.

மாவட்டந்தோறும் இருக்கும் கால்நடை மருத்துவமனைகளைச் சீர்படுத்தி, மேம்படுத்துவதுடன், ஒவ்வொரு நகரத்திலும் கால்நடை மருத்துவமனை நிறுவ வேண்டும். வாரத்தில் ஒருநாள் கிராமந்தோறும் கால்நடை மருத்துவ முகாம் நடத்தி நோய்வாய்ப்படும் கால்நடைகள், பசுக்கள் நோய் தீர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

thanks to http://thatstamil.oneindia.in/news/2011/07/13/give-country-cows-free-cattle-program-ramagopalan-aid0090.html
நாட்டுப் பசுக்களை வழங்க வேண்டும்-ஜெ.வுக்கு ராம கோபாலன் கோரிக்கைSocialTwist Tell-a-Friend

No comments: