2012ம் ஆண்டில் இந்தியாவை சீனா தாக்கக் கூடும் - பாதுகாப்பு நிபுணர்

TODAY
டெல்லி: உள்நாட்டில் பெருகி வரும் பல்வேறு பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க இந்தியா மீது 2012ம் ஆண்டில் சீனா படையெடுக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக பிரபல இந்திய பாதுகாப்பு ரெவ்யூ என்ற இதழின் ஆசிரியர் பரத் வர்மா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 2012ம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்பாகவோ இந்தியாவை சீனா தாக்கக் கூடும். இந்தியாவுக்கு இறுதியான, உறுதியான பாடத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என சீனா துடித்துக் கொண்டுள்ளது.

மேலும் ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை நிலை நாட்டவும் அது தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகவும் இந்தியாவைத் தாக்க அது திட்டமிட்டு வருகிறது.

பொருளாதார சீர்குலைவால் சீனாவின் ஏற்றுமதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர்ச் சந்தையில் பெரும் பாதிப்பு காணப்படுகிறது. இந்தியாவும் இதற்கு ஒரு காரணம் என அது கருதுகிறது.

இதுதவிர சீனாவில் ஏற்பட்டு வரும் பல்வேறு உள்நாட்டு குழப்பங்கள் காரணமாகவும், அத்தனையிலிருந்தும் மக்களை திசை திருப்பும் வகையில், இந்தியா மீது சீனா படையெடுக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று கூறியுள்ளார் வர்மா.
2012ம் ஆண்டில் இந்தியாவை சீனா தாக்கக் கூடும் - பாதுகாப்பு நிபுணர்SocialTwist Tell-a-Friend

No comments: