பிரிட்டிஷ் அரசு தன்னை இயல்பான வீரத்துடன் எதிர்க்கும் இந்தியப் பழங்குடியினர் பலரை பிறப்பிலேயே குற்றம் புரிபவர்கள் என்ற அடையாளப்படுத்தி அவர்களை விசாரணை ஏதுமின்றி கண்காணிக்கவும் தண்டிக்கவும் தன்னைக் கொடுமையாக பலப்படுத்திக் கொண்டது.தினகரன் ஜெய் இயக்கி எழுதியுள்ள "ரேகை" டாகுமெண்டரி மிகுதியாக தமிழ்நாட்டில் பிறப்பினால் குற்றப்பழி சுமந்த ஒரு பரம்பரையினரைப் பற்றியும் அதன் மீது பிரிட்டிஷ் அரசு நடத்திய அடக்குமுறைகளையும் அடுக்கடுக்காக விவரிக்கிறது
READ MORE...
தீண்டத்தகாதவர்கள் என்ற பெயரில் ஒரு பெரும் பிரிவினர் தொன்று தொட்டு சாப விமோசனம் இன்றி கொடுமைப்படுத்தப்பட்டு வருவது இந்தியாவின் பெருத்த அவமானம் ஆகும். தீண்டத்தாகாதவர்கள் என்று சொல்லப்பட்ட தலித்துகள் செய்யும் ஒரே பாவம் ஆதிக்க ஜாதிகளால் வரையறுக்கப்பட்ட ஜாதிகளில் சந்ததிகளாக இருப்பது மட்டுமே. இது போதாதென்று பிரிட்டிஷ் அரசு தன் அதிகாரத்தின் வாயிலாக குற்றப்பரம்பரை என்றும் புதிய ஜாதியை உருவாக்கியது.
தீண்டத்தகாதவர்கள் என்கிற முத்திரையைக் குத்தி அவர்களை அடிமைப்படுத்தி அவர்களது உழைப்பினை சுலபமாக சுரண்டுவதற்கு சமூகம் ஒரு கயமையான உபாயத்தை இதன் மூலம் வகுத்ததைப் போலவே, பிரிட்டிஷ் அரசு தன்னை இயல்பான வீரத்துடன் எதிர்க்கும் இந்தியப் பழங்குடியினர் பலரை பிறப்பிலேயே குற்றம் புரிபவர்கள் என்ற அடையாளப்படுத்தி அவர்களை விசாரணை ஏதுமின்றி கண்காணிக்கவும் தண்டிக்கவும் தன்னைக் கொடுமையாக பலப்படுத்திக் கொண்டது.
தினகரன் ஜெய் இயக்கி எழுதியுள்ள "ரேகை" டாகுமெண்டரி மிகுதியாக தமிழ்நாட்டில் பிறப்பினால் குற்றப்பழி சுமந்த ஒரு பரம்பரையினரைப் பற்றியும் அதன் மீது பிரிட்டிஷ் அரசு நடத்திய அடக்குமுறைகளையும் அடுக்கடுக்காக விவரிக்கிறது.
பிரெஞ்சு புரட்சிப் பின்னணியிலிருந்து படத்தை துவக்குகிறார் தினகரன் ஜெய். ஆளும் வர்க்கத்தினருக்கெதிராக போராடியவர்களில் நாடோடி வம்சத்தை சேர்ந்தவர்களும் இருந்தனர். எனவே, அவர்கள் மீது ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்தது பிரெஞ்சு அரசு. பிரெஞ்சு அரசின் இந்த உபாயத்தைக் கடைபிடித்ததின் விளைவாக பிரிட்டிஷ் அரசும் தனது காலனிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவிலும் இந்த நடைமுறையைப் பின்பற்றியது. இங்குள்ள பழங்குடியினர் இருப்பிடமற்ற நாடோடிகள், பிச்சைக்காரர்கள், ஜோதிடக்காரர்கள், விபச்சாரிகள் ஆகியோரை அபாயகரமானவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டனர். இதனால் சமூக வாழ்விலிருந்து அவர்கள் விலக்கப்பட்டனர். பழங்குடியினர் போரிடுவதன் மூலம் தங்கள் சுதேசியத்தை வெளிப்படுத்தினர் என்பதால் அதை ஒரு முகாந்தரமாகக் கொண்டு அவர்கள் மீது குற்றப் பரம்பரை சட்டம் அவிழ்த்து விடப்பட்டது. 1871லிருந்தே இது அமலில் இருந்தது. 1897, 1911, 1924, 1944 என பலகால கட்டங்களில் இச்சட்டத்தின் திருத்தங்கள் தீவிரம் கொண்டன.
இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட ஜாதியினர் குற்றப்பரம்பரை பிரிவின் கீழ் இருந்தனர். தமிழகத்தில் மட்டும் 90க்கும் மேற்பட்ட ஜாதிகள் இதன் கீழ் பட்டியலிடப்பட்டன. பன்றி இறைச்சி சாப்பிடுபவர்களும் குற்றப் பரம்பரையினராயினர். அரவாணிகளும் கண்காணிக்கப்பட்டனர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோர் 1911ல் இச்சட்டத்தின் கீழ் கண்காணிக்கப்பட்டனர். வரி கொடாத இயக்கத்தில் சேர்ந்த பிறமலைக் கள்ளர்கள் அதிக பாதிப்புக்குள்ளாயினர்.
இத்தனைக்கும் பிறகும் போலீசாரால் இவர்களை குற்றம் செய்தவர்கள் என்று வழக்குகளின் அடிப்படையில் நிரூபிக்க இயலவில்லை. குற்றப் பரம்பரையினரின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களுக்கு சுதந்திரமாக உலாவுவதில் கட்டுப்பாடுகள் இயற்றப்பட்டன. ரேகைப் பதிவு சட்டத்தை எதிர்த்து பெருங்காமநல்லூர் கிராமத்தில் நடந்த போராட்டத்தில் பலர் உயிரிழந்தனர். இச்சட்டத்தை பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கடுமையாக எதிர்த்தார். காங்கிரஸ் கட்சியும் இதற்கு ஆதரவு அளித்தது. இறுதியாக இச்சட்டம் 1947 ஜுன் மாதம் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது.
தினகரன் ஜெய் மருது சகோதரர்களின் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கெதிரான பங்களிப்பினைப் பற்றி தென்னிந்தியப் புரட்சி 1801 என்ற (மருதிருவர்) டாகுமெண்டரி எடுத்திருக்கிறார். தினகரன் ஜெய்க்கு ஆவணங்களை வைத்து பிரச்சனைகளை சித்தரிப்பதில் திறமையும் ஆர்வமும் இருக்கிறது. அந்த டாகுமெண்டரியைப் போலவே இதிலும் வரைபடங்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவை தக்க இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. நிகழ்த்திக் காட்டலும் இதில் உண்டு.
எழுத்தாளர் வேல. இராமமூர்த்தி, நாட்டுப்புறவினர் இ.முத்தையா ஆகியோரின் பேட்டிகள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. பல சிறப்புகள் கொண்ட இப்படத்தில் நான் காண விரும்பிய முக்கிய அம்சம் குற்றப்பரம்பரை சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல்கள். 1947வரை அச்சட்டம் இருந்ததால் அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் நம்மிடையே முதியவர்களாக இருக்கத்தான் செய்வார்கள். அவர்களது சித்திரவதை அனுபவங்கள் படத்தை மேலும் ஈர்ப்புடையதாக ஆக்கியிருக்கும். சட்டங்கள் வாயிலாக அடக்குமுறைகள் செயல்பட்டதால் ஒரு சட்டவியல் நிபுணரின் நேர்காணலும் படத்திற்கு மேலும் செறிவினை ஊட்டியிருக்கும்.
ஏறத்தாழ எழுபத்தைந்து வருடங்கள் பல்வேறு சட்டங்கள் மூலம் அராஜகம் புரிந்து அவிந்து போன குற்றப்பரம்பரை என்னும் கொடிய நடைமுறையைப் பற்றி ஏதும் அறிந்திராதவர்கள் கூட "ரேகை" என்ற இந்த ஆவணப்படத்தைப் பார்த்து தெளிவான தகவல்களை அடைய முடியும்.THANKS TO http://www.keetru.com/kanavu/feb08/amshankumar.php
No comments:
Post a Comment