சென்னை, ஆக. 31: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தலில் நடிகர் ரித்திஷ் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ராமநாதபுரம் எம்.பி., தொகுதியில் ஜே.கே. ரித்திஷ் (திமுக), ஜி. சத்தியமூர்த்தி (அதிமுக), திருநாவுக்கரசர் (பாஜக) உள்பட 15 பேர் போட்டியிட்டனர். இதில் நடிகர் ரித்திஷ் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து சத்தியமூர்த்தி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு விவரம்: நடிகர் ரித்திஷ் சாதாரண நடிகர். ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் ரூ. 25 கோடியை அவர் எவ்வாறு செலவு செய்தார் என்று தெரியவில்லை. அவரும், அவரது கட்சியினரும் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்துள்ளனர். இதைத் தவிர தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். நடிகர் ரித்திஷின் பெற்றோர் இலங்கையில் உள்ள கண்டியில் வசித்து வருகின்றனர்.
கண்டியில் பிறந்த அவர் இந்தியப் பிரஜையே அல்ல. இந்தியப் பிரஜை என்று தவறான தகவல் அளித்து அவர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். எனவே, அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். ராமநாதபுரம் தொகுதியில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது. நீதிபதி கே. சந்துரு முன்னிலையில் இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, இதுகுறித்து வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ரித்திஷ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment